மறைந்தும் மறையாமல் வாழும் ரேடியோ பாலா

மலாக்கா முத்துக்கிருஷ்ணன்*

 

மலேசிய வரலாற்றுச் சுவடுகளில், வையகம் போற்றும் மனுக்குல மைந்தர்கள் பலர் வாழ்ந்து மறைந்து இருக்கின்றார்கள். சிலர் மறைந்தும் மறையாமல் உயிர்ப்பு பெறுகின்றார்கள். வரலாற்றுச் சப்த சுவரங்களாக மாறுகின்றார்கள். சிலர் அந்தச் சகாப்த வேதங்களையும் தாண்டி, நம்முடன் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றார்கள்.  அவர்களில் ஒருவர்தான் இரா.பாலகிருஷ்ணன். மலேசிய வானொலியின் முன்னாள் இந்தியப் பகுதித் தலைவர் ரேடியோ பாலா.  

தமிழ்மொழியின் மீது சொல்ல முடியாத பாசத்தை வைத்திருந்தவர். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அயராது உழைத்தவர். அதனால், மக்கள் நினைவில் நிலைத்து வாழ்கின்றார். தமிழை நேசிப்போர் மனத்தில் இன்றும் இனி என்றும் கோபுரக் கலசமாகத் திகழ்கின்றார்.

இரா.பாலகிருஷ்ணன், மலேசிய வானொலியில் இருந்த போது தமிழ் ஏற்றம் கண்டது. மொழிவளம் மேம்பட்டது. முறையான உச்சரிப்பு, மொழிவளம், குரல் தரம், பேச்சுத் திறன், கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு முதன்மை அளித்தவர் பாலா. அந்த அடிப்படையிலேயே வானொலி அறிவிப்பாளர்களைப் பணியில் அமர்த்தினார்.

பொன்னான காலம்

1960 ஆம் ஆண்டுகளை மலாயா வானொலித் தமிழ்ப்பகுதிக்கு பொன்னான காலம் (Golden Era) என்று சொல்வார்கள். அந்தக் காலக் கட்டத்தில் மலாயா வானொலி இசைச் சோலையாக மாறியது. பல மாற்றங்கள் செய்யப் பட்டன. இரா.பாலகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு வந்ததும் பல புதுப் புது மாற்றங்களைச் செய்தார். பல புதிய நுணுக்கமான அணுகு முறைகளையும் கொண்டு வந்தார். ஒலிபரப்புத் துறைக்கும் அதில் தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும் அளப்பரிய பங்கினை ஆற்றியவர் இரா.பாலகிருஷ்ணன். அதன் காரணமாகவே அவர் 'ரேடியோ பாலா' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

தமிழ்மொழி ஒலிபரப்பில் பிற மொழிச் சொற்களையும் சமஸ்கிருதச் சொற்களையும் படிப்படியாகக் குறைத்தார். அந்தக் காலக்கட்டத்தில் வடமொழிச் சொற்கள் வஞ்சகம் இல்லாமல் புழக்கத்தில் இருந்தன. பாலா அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது வருகைக்குப் பின்னர் 'நமஸ்காரம்' என்பது 'வணக்கம்' ஆனது. 'ஆரம்பம்' என்பது 'தொடக்கம்' ஆனது. 'மந்திரிகள்' என்பவர்கள் 'அமைச்சர்கள்' ஆனார்கள். 'அபிப்பிராயம்' என்பது 'எண்ணம் அல்லது கருத்து' என்று ஆனது. இப்படி எத்தனையோ தமிழ்ச் சொற்கள். இயன்றவரை நல்ல தமிழ் வளரும் இடமாக வானொலியை அவர் மாற்றி அமைத்தார்.

புதுமை விரும்பி

வானொலி நிகழ்ச்சிகளில் புதுமைகள் செய்ய விரும்பி யாராவது அவரிடம் அனுமதி கேட்டால், உடனே அவர்களைத் தட்டிக் கொடுத்து உற்சாகம் செய்வார். அதனால்தான் பாலா காலத்து ஒலிபரப்பு மிகவும் சிறப்பாக இருந்தது என்று சொல்வார்கள். ஆங்கிலமொழி, மலாய் மொழி, சீன மொழி ஒலிபரப்புகளுக்கு இணையாக விளங்கியது. தமிழ் ஒலிபரப்பின் பொன்னான காலமாகப் போற்றப்படுகிறது.

அதற்காக அவருக்குப் பின்னர் வந்த தலைவர்களின் சேவையை யாரும் குறைவாக மதிப்பீடு செய்யவில்லை. ஹனிப், கமலா தேசிகன், சுவாமிநாதன், கணபதி, அப்பாதுரை, டாக்டர் வி.பூபாலன், இராஜசேகரன் போன்றவர்களும் மிகச் சிறப்பான சேவைகளை வழங்கி இருக்கின்றனர். பாரத்தசாரதி காலத்திலும் அற்புதமான நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டன. பாராட்டுகள்.

1960களில் தமிழ்த் திரைப் பாடல்கள் ஒலிபரப்பு செய்யப் படும் போது, மூன்று தமிழ்ப் பாடல்களுக்கு ஓர் இந்திப் பாடலை ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்பது மேலிடத்து ஆணை. அதற்கு சாணக்கியமான முறையில் தீர்வு கண்டவர் ரேடியோ பாலா. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல தமிழ்ப்பாடல்களுக்கு முன்னுரிமை செய்து கொடுத்தார்.

’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார். அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு பலமுறை முயற்சிகள் செய்தார். பல ஆண்டுகளாகப் போராட்டங்கள் செய்து வெற்றியும் பெற்றார். அப்போது தமிழ்மொழிக்குக் குறைந்த ஒலிபரப்பு நேரமே வழங்கப் பட்டு வந்தது.

பாலாவின் காலத்தில்தான் ஒலிபரப்பு நேரம் கூட்டப்பட்டது. ஒரு கட்டத்தில் இரவு ஒன்பது மணிக்கு முடிவடையும் தமிழ் ஒலிபரப்பு, இரவு 11 மணிவரை நீட்டிக்கப்பட்டது. சில சிறப்பு நாள்களில் நள்ளிரவு வரையில் இந்தியப் பகுதி ஒலிபரப்பு செய்தது. அதே சமயத்தில் ஒலிபரப்பின் தரமும் உயர்ந்தது. எட்டு மணி நேர ஒலிபரப்பை 14 மணி நேர ஒலிபரப்பாக உயர்த்திக் காட்டினார். அவருடைய முயற்சியின் பலனாக இப்போது 24 மணி நேர ஒலிபரப்பாக ஒலித்து வருகின்றது.

வட்டார ஒலிபரப்பு

அவர் காலத்தில், ஈப்போவிலும், ஜோகூர் பாருவிலும் புதிதாக இரண்டு வட்டார நிலையங்கள் செயல்படத் தொடங்கின. அதற்கு முன்பு பினாங்கு, மலாக்கா ஆகிய இரண்டு நகரங்களில் மட்டுமே வட்டார நிலையங்கள் இருந்தன. இப்போது அந்த நிலையங்களில் வட்டாரத் தமிழ் ஒலிபரப்பு இல்லை.

இராமானுஜம் - கிருஷ்ணம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1936ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளன்று தெலுக் இந்தான், ரூபானா தோட்டத்தில் பிறந்தார். அவரின் தந்தை அதே தோட்டத்தில் கணக்கராக இருந்தார். அவருக்கு பாலகிருஷ்ணன், பத்பநாபன், ஹரிராமுலு, சாம்பசிவம், ராதா, இந்திராவதி, புஷ்பலீலா என ஏழு பிள்ளைகள்.

ஜப்பானியரின் ஆட்சிகாலத்தில் ரூபானா தமிழ்ப்பள்ளியில் தன் தொடக்கக் கல்வியைப் பயின்றார். பின்னர் சிரம்பான் சென்றார். அங்கு தன் மாமாவின் இல்லத்தில் தங்கி தன் ஆங்கிலக் கல்வியைத் தொடர்ந்தார். காலையில் ஆங்கிலோ சீனப் பள்ளியில் ஆங்கிலத்தையும், பிற்பகலில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழியையும் கற்றார்.

பின்னர் அவருடைய மாமா வேலை மாற்றலாகி தெலுக் இந்தான் வந்தார். அதனால், பாலகிருஷ்ணனும் அவருடன் வர வேண்டிய நிலை ஏற்பட்டது. தெலுக் இந்தான் ஆங்கிலோ சீனப் பள்ளியிலும், பாரத மாதா தமிழ்ப்பள்ளியிலும் கல்வியைத் தொடர்ந்தார்.

பள்ளிக்கூடத்திற்கு படகில் போனார்

அவருடைய பள்ளி வாழ்க்கை சிரமமானது. அதிகாலையிலேயே எழுந்து கிந்தா ஆற்றைப் படகு மூலமாகக் கடக்க வேண்டும். பின்னர் எட்டு கிலோமீட்டர் சைக்கிளில் மிதித்து பள்ளி செல்ல வேண்டும். சைக்களில் கிந்தா ஆறுவரை சென்று, படகில் ஏறி ஆற்றைக் கடப்பார். ஆற்றைக் கடந்ததும் படகுத் துறையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளிவரை மறுபடியும் சைக்கிளை மிதிப்பார்.

விளையாட்டுகளில், குறிப்பாக கால்பந்தாட்டத்தில்,  அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிப்பையும் அதன்பின் புறப்பாட நடவடிக்கைகளையும் முடித்துக்கொண்ட  ீடு திரும்பும்போது மிகவும் களைத்துப் போய்விடுவார்.

ஆறாம் படிவம் படிக்கின்ற காலத்தில் ஸ்டான்லி பத்மன் எனும் ஆசிரியரின் இல்லத்தில் தங்கிப் படித்தார். ஸ்டான்லி ஆசிரியர் தான் அவருக்கு நம்பிக்கைக்கு உரிய அறிவுரையாளராகவும் காப்பாளராகவும் விளங்கினார். பாலகிருஷ்ணனின் வாழ்க்கையைத் திசை மாற்றி அமைத்தவரும் அவரே. பத்மனுடன் இருந்த காலம்தான் பாலாவின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய காலமாகும்.

விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப் போட்டிகளில் சிறந்து விளங்கியதால் அவர் பள்ளியின் தலைமை மாணவ ஆளுகையாளராக நியமிக்கப் பட்டார். அந்தக் காலக் கட்டத்திலேயே பாலகிருஷ்ணனின் படங்கள் மலேசிய நாளிதழ்களில் பிரசுரமாயின.

மலேசிய ராக்கஃபில்லர்

ஈப்போ ஏ.சி.எஸ். ஆங்கிலப்பள்ளியில் தனது ஆறாம் படிவத்தை முடித்துக்கொண்டார். பின்னர் அங்கிருந்து பல்கலைக்கழகம் சென்றார். ரூபானா தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பல்கலைக்கழகம் சென்றது அதுவே முதல்முறையாகும். 1956-இல் சிங்கப்பூரில் இருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தார். பல்கலைக்கழகத்திலும் அவர் காற்பந்து போட்டியில் சிறந்து விளங்கினார்.

பல்கலைக்கழக மாணவர்கள் அவரை ‘ராக்பில்லர்’ என்று செல்லமாக அழைத்தனர். அவருக்கு ‘கோலி பாலா’ எனும் மற்றோர் அடைமொழியும் இருந்தது. 1960 ஆம் ஆண்டு இந்தியக் கல்வியில் முதல் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றார். அவரைப் பாராட்டி பல்கலைக்கழகத்தின் பரிசும் விருதும் வழங்கப் பட்டன.

அதே ஆண்டு தம்முடைய 24வது வயதில் மலேசிய வானொலியில் (அப்போது மலாயா வானொலி) நிகழ்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். மலேசிய வானொலியில் பணிபுரிந்து கொண்டே மலாயா பல்கலைக்கழகத்தின் இந்தியப் பிரிவில் 1961-1970 வரை பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

வானொலியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பாலா. வானொலியின் இந்தியப் பகுதியில் பல மாற்றங்களைச் செய்து அதற்குத் தனி மதிப்பையும் மரியாதையையும் கொண்டு வந்தார். அவரது காலத்தில் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

ஐ.நா. பேசுகிறது

'கலப்படம்' என்றொரு நிகழ்ச்சி.  உள்நாட்டுக் கலைஞர்கள் தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகத் திகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியின் வழி எண்ணற்ற கலைஞர்கள் அறிமுகமாகிப் பிரபலம் அடைந்திருக்கிறார்கள். உள்நாட்டுக் கவிஞர்கள் எழுதும் பாடல்களுக்கு நிலையத்தின் இசைக் கலைஞர்களான நாகசாமி பாகவதர், ரெ.சண்முகம், ந.மாரியப்பன் போன்றோர் இசையமைத்துச் சிறப்பு செய்தனர்.

’ஐ.நா. பேசுகிறது’ எனும் நிகழ்ச்சியை இவரே எழுதி இவரே தயாரித்து வழங்கினார். சில ஆண்டுகள் 'நேயர் மன்றம்' என்ற நிகழ்ச்சியில், வானொலி நேயர்களின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் பதிலளித்ததும் உண்டு. 'கோடி வீடு,' 'நாட்டு நடப்பு,' 'என்ன சேதி,' 'உள்ளதைச் சொல்வோன்'  ுதலிய நிகழ்ச்சிகள் அவர் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவையே.

அத்துடன், மலாயா வானொலியின் தமிழ் ஒலிபரப்பு நேரத்தைக் கூட்டுவதற்கு இவர் பலமுறை முயற்சிகள் செய்தார். 1962லிருந்து 1972வரை மலேசிய வானொலியின் இந்தியப் பகுதி தலைவராகவும் மலேசிய ஒலிபரப்பு பயிற்சி மையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். 1976 ஆம் ஆண்டு ’யுனெஸ்கோ’ அவரை ஆசிய பசிபிக் ஒலிபரப்பு பயிற்சிக் கழகத்தின் தலைவராக நியமித்தது. அவருடைய அயராத முயற்சியின் பலனாக மலேசிய வானொலியின் தமிழ்ப்பகுதியில் இப்போது 24 மணி நேர ஒலிபரப்பு ஒலித்து வருகின்றது.

சிறந்த கலைஞர்களைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் படைக்கப்பட்ட 'வானொலி விழா'வை வானொலி ரசிகர்கள் இன்றும்கூட நினைவில் வைத்திருக்கிறார்கள். தரமான கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தரமான நிகழ்ச்சி அது. மேடையில் நடத்தப்படும்போதே வானொலியிலும் நேரடியாக ஒலிபரப்பாகும். அதை நேரில் கண்டு ரசிக்க நேயர்கள் கூட்டம் அலைமோதும்.

கிரிஜா நாயுடு

மலேசிய இந்தியர்களின் தலைவர்களுடன் நெருக்கமாகப் பழகினார். அவர்களின் உதவியுடன் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முயற்சிகள் செய்துள்ளார். அவருடைய இறுதி காலம் வரை ராம சுப்பையா படிப்புதவி கடனுதவிக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.

1965 மார்ச் 27ல் பாலகிருஷ்ணன் தன்னுடைய 28வது வயதில் கிரிஜா நாயுடு என்பவரைத் திருமணம் செய்தார். அவருடைய திருமணம் மலேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப் பட்டது. இவர்களுக்கு அனுராதா(1966), லெட்சுமி(1967), வெங்கடகிரி(1969), ஸ்ரீதர்(1973) எனும் நான்கு குழந்தைகள். பாலகிருஷ்ணன் கிரிஜா தம்பதியினருக்கு சைலேஷ், மனிஷா, நிக்கில், திரிஷா, திரன் எனும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

உடுத்துவதிலும் தன்னுடைய தோற்றத்தை நேர்த்தியாக வைத்துக் கொள்வதிலும், பாலா தனி அக்கறை எடுத்துக் கொள்வார். நீல நிறப் பட்டுச் சட்டைகள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும். ஆங்கில, தமிழ் மொழிகளை அழகாகவும் தெளிவாகவும் பேசும் திறமையைப் பெற்றவர்.

1967-இல், ஏழை இந்திய மாணவர்கள் உயர்க் கல்விபெற இராம சுப்பையா உதவிச்சம்பள நிதி வாரியம் அமைக்கப்பட்டது. அதன் தலைவராக பொறுப்பேற்ற அவர், தன்னுடைய இறுதிகாலம் வரை அந்தப் பொறுப்பை வகித்தார்.

மாஜூ ஜெயா

சிறுதொழில் தொடங்கும் இந்தியர்களுக்கு உதவும் நோக்கத்தில் மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகம் அமைக்கப்பட்டது. அந்தக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பேற்ற பாலா, பல நூறு பேருக்கு உதவிகள் செய்துள்ளார்.

அவர் வகித்த பதவிகள்:

* உலக பத்திரிகைச் சுதந்திரக்குழுத் தலைவர்

* பேங்க் பூரோ (மலேசியா) பெர்ஹாட் இயக்குனர்

* ஸ்டீபன்ஸ் புராப்பர்ட்டீஸ் இயக்குனர்

* அனைத்துலக ஒலிபரப்புக்கழக உறுப்பினர்

* ஆசிய பொதுத்தொடர்பு, ஆராய்ச்சி மற்றும் தகவல் மைய உறுப்பினர்

* காமன்வெல்த் ஊடகக் குழு உறுப்பினர்

* இந்தியத் தூதரக உதவிச்சம்பளக் குழு உறுப்பினர் (1979)

* அனைத்துலக தொடர்புத்துறைக் கழக அறங்காவலர்

* ஆசிய தொலைக்காட்சி திரைப்பட வங்கி கண்காணிப்புக் குழுத் தலைவர்

ஒலிபரப்புத் துறையில் பாலா ஆற்றிய மகத்தான சேவைகளைப் பாராட்டி, கனடாவில் இருக்கும் டொராண்டோ ரையர்சன் கழகம் 1988-இல் அவருக்க  ெல்லோஷிப் (fellowship)  விருதை அளித்துச் சிறப்பு செய்தது.

பாலகிருஷ்ணன் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் தேதி Pulmonary Fibrosis Emphysema எனும் நுரையீரல் பாதிப்பினால், அவருடைய கோலாலம்பூர் ரா டமன்சாரா இல்லத்தில் இயற்கை எய்தினார். அவருடைய இரண்டாவது மகள் டாக்டர் லட்சுமி, ஆஸ்திரேலியாவில் மருத்துவராக இருக்கும் போதுதான் பாலாவுக்கு அந்த நுரையீரல் நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், காலம் கடந்துவிட்டது. அவருடைய இழப்பு மலேசிய இந்தியர்களுக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பெரும் இழப்பு ஆகும்.

அவர் ஆற்றிய தமிழ்ச் சேவை இன்று வரை மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது. மலேசியத் தமிழ்மொழி வரலாற்றில் ஆழமான காலச் சுவடுகளைப் பதித்துள்ளது. அவரது அமைதியான பண்பும், இனிமையாகப் பழகும் தன்மையும், மனித நேயமும், விரிந்த மனப்போக்கும் எவரையும் எளிதில் வசப்படுத்திவிடும் என்று முன்னாள் வானொலி அறிவிப்பாளர் பி. இராமச்சந்திரன் கூறுகிறார். அவர் வாழ்க்கையில் ஒரு முறை அழுது இருக்கிறார். அவருடைய மூத்த மகள் அனுராதா திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்ற போது கண்ணீர் விட்டு அழுதாராம்.

தமிழ் எழுத்தாளர்கள் பலரை மலாயா வானொலியில் அறிமுகம் செய்த பெருமை பாலாவைச் சாரும். பட்டைத் தீட்டப்படாமல் சிதறிக் கிடந்த எழுத்தாளர்களை எல்லாம் ஒன்று திரட்டினார். பட்டைத் தீட்டிப் பிரகாசிக்கச் செய்தார். அவர்களில் அடியேனும் ஒருவன். அவர் கொடுத்த உந்துதல், அது வாழ்நாள் வரலாறு. 1970, 80களில் நிறைய வானொலி நாடகங்களை எழுதினேன்.  என்னைப் பட்டை தீட்டிய மாமனிதர்!

அவர் ஆற்றிய தமிழ்ச் சேவை, இன்று வரை மலேசியத் தமிழர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளது. வரலாற்றில் ஆழமான காலச் சுவடுகளைப் பதித்துள்ளது. அன்றும் இன்றும் மனித மனச் சங்கமங்களில் மந்திரப் புன்னகைகளை அள்ளித் தெளித்து ஆலாபனை செய்து வருகின்றார்.

நீங்கள் இறக்கவில்லை பாலா!

எங்களுடன் வாழுகின்றீர்கள்!

 

*இக்கட்டுரை தினக்குரல் நாளேட்டில் 27.8.2012, 28.8.2012 ஆகிய நாட்களில் இரு பகுதிகளாக வெளியிடப்பட்டதாகும்.