எண்ணங்கள்

பாலாவின் உரைகளிலும் உரையாடல்களிலும் கேலியும் கிண்டலும் நக்கலும் நகைச்சுவையும் வெளிப்படையான கருத்துகளும் விமர்சனங்களும் கலந்தும் மிளிர்ந்தும் காணப்படும். அவரது விழுமிய கருத்துகள் மேற்கோள் காட்டப்படத்தக்கவை; பொன்மொழிகளாகக் கொள்ளப்படத்தக்கவை எனலாம். அவற்றில் சில....

    எவரொருவர் அதிகார உரிமையையும் ஆணையையும் எதிர்பார்த்து செயல்படுகிறாரோ அவர் பெரிதும் தன்னம்பிக்கையற்றவர் என எண்ணுகிறேன். ஏனெனில் தன்னம்பிக்கையுடைய ஒருவர் அதிகார உரிமை அல்லது ஆணையின் அடிப்படையில் தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தமாட்டார் அல்லது தனது வாழ்க்கையை நடத்தமாட்டார்.  

 பயிற்சியென்பது அறிவு, அனுபவம் ஆகியவற்றின் எல்லையை விரிவாக்குவதாகும். இது பயிற்றுநர்களையும் பயிற்சி பெறுவோரையும் உள்ளடக்கியதாகும். அறிவு மேம்பாட்டை  பண்பாடு, நாடு அல்லது அரசியல் என்னும் குறுகிய வட்டத்துக்குள் அடைய முடியாது.

  பயிற்சி முறையாகவும் ஒழுங்காகவும் மேற்கொள்ளப்படாவிடில், அது விரயமாகிவிடும், பெரும் சுமையாகிவிடும். பிரச்சினைக்குரிய, திறமையற்றப் பணியாளர்களைப் பயிற்றுநர் பதவிகளில் அமர்த்துவதும் பயனற்றதாகும். நான் பொதுவாக, கல்வி, பயிற்சி எனப்படும் சிறப்புக் கல்வியின்மீது வைத்திருக்கும் மதிப்பு மிக உயர்ந்ததாகும். ஒரு நல்ல பயிற்றுநர் தனது நன்னெறிக் கோட்பாடுகளைப் பரப்புவார்; ஆனால் ஒரு திறமையற்ற பயிற்றுநர் தனது தவறுகளைத்தான் பெருக்க முடியும்; பரவலாக்க இயலும்.

  பயிற்சிப் பொறுப்பின் உண்மைத் தன்மையை உணராதிருப்பது அல்லது புறக்கணிப்பது மிக ஆபத்தான செயலாகும்.  இதனை ஓர் அழிவுத் தீர்க்கதரிசனமாகக் கொள்ளக்கூடாது. 

    தகவல் பெறுவதற்கும் தகவல் அளிப்பதற்கும் நமக்கு உரிமையுண்டு. இந்த உரிமையை யாரும் நம்மிடமிருந்து பறித்துக் கொள்ள முடியாது.

   அனைத்து நொண்டிச் சாக்குப்போக்குகளுக்கும் உலகில் போதுமான ஊன்றுகோல்கள் கிடையாது.

   பள்ளிப் படிப்பு நம் அறிவை மேம்படுத்தி நம் வாழ்க்கைத் தொழிலை வளர்ப்பதோடு சரி; ஆனால் வாழ்க்கைப் பாடங்களை நமது அனுபவங்களிலிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும்.

   தமிழ் ஒலிபரப்பில் மிகப் பெரிய குற்றம் தமிழ்க்கொலை புரிவதாகும்.

   பொறுப்புள்ள ஒலிபரப்பாளர்கள் மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக குப்பைகளைக் கொடுக்காமல், நல்ல நிகழ்ச்சிகளைப் படைத்து, மக்கள் விரும்பும் வண்ணம் ஒரு மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி, அந்நிகழ்ச்சிகள் அவர்கள் வாழ்க்கைக்கு ஒரு படிப்பினையாகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாகவும் அமைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

  மக்கள் கோருவதையும் வேண்டுவதையும் அவர்களுக்குப்  படைத்தளியுங்கள். ஆனால் அதனை அன்றாட வாழ்க்கைக்குப் பயனளிக்கும் வகையில் விழுமங்கள் நிறைந்த தொகுப்பாக வழங்க வேண்டும்.

  வானொலி அறிவிப்புகள் ஆடம்பரமாக, அலங்காரமாக இருக்கத் தேவையில்லை. தொழில் சார்ந்த நெறிமுறை பிறழாது கண்ணியமான முறையில் அறிவிப்புகள் செய்யப்பட வேண்டும்.

  நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் அல்லது நடவடிக்கைகளில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது பலவீனங்களுக்கு  பிறரைக் குறைகூறக் கூடாது. குறை நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து அதனை முதலில் ஆராய வேண்டும்; களைய வேண்டும்.

  அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்களைத்தான் கொண்டுவரும்.

  தூய்மையே இறைவனுக்கு அடுத்ததாகும். தூய்மையான கைகளுடன் நமது அன்றாடக் கடமைகளைத் தொடங்க வேண்டும்.

  எந்தப் பெண்மணி அடக்கமாகவும் நளினமாகவும், உடுத்தும் உடையில் எளிமையாகவும், பிறரைப்பற்றிப் புறங்கூறாமலும், வதந்திகளுக்கும் 'கிசுகிசு'களுக்கும் செவிசாய்க்காமலும், தனது குடும்பப் பண்புகளையும் விழுமங்களையும் பேணிக்காத்து, எக்காலத்திலும் கணவருக்கு உறுதுணையாக இருக்கின்றாளோ, அவளே ஒரு விரும்பத்தக்க மனைவியாவாள்.

 மாற்ற முடிந்ததை மாற்றுவதற்குத் துணிவு கொள்; உன்னால் மாற்ற முடியாததை ஏற்றுக்கொள். ஏனென்றால் நீதி நிலைப்பதற்கு  வாழ்க்கை தானாகவே அதன் பாதையை நோக்கிச் செல்லும்.

  முழுமையாக, மனநிறைவுடன் வாழ்ந்த வாழ்க்கை என்பது எவ்வித ஆதங்கம் அல்லது மனக்குறை இல்லாத, நமக்குப் பிறகும் இறவாப் பெயர் பெற்ற ஓரு நிலையாகும்.

  உணவு சுவைத்து உண்பதற்காக; ஆனால் அந்த உணவைப் பகிர்ந்து உண்டால் அதன் சுவை கூடும்.

  பிறரிடமுள்ள நல்ல பண்புகளைப் பார்த்து அந்தப் பண்புகளின் அடிப்படையில் உங்கள் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறர் குறைகளை அல்லது தவறுகளை அடையாளம் காண்பது உங்கள் கடமையல்ல.

தமிழாக்கம்: N.கோவிந்தன் / திருமதி கிரிஜா பாலகிருஷ்ணன்