நினைவாஞ்சலி

                                               அன்பீனும் ஆர்வமுடைமை அதுவீனும்

                                               நண்பென்னும் நாடாச் சிறப்பு.

பாலகிருஷ்ணன் அவர்களின் மறைவுக்கு எண்ணற்ற  இரங்கல் செய்திகள் கிடைக்கப் பெற்றன.   அவற்றில் சில இங்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எல்லாக் காலங்களிலும் எனக்கு நண்பராக விளங்கியவர்

என் வாழ்க்கையில் நட்பு எனும் வட்டத்திற்குள் பாலாவின் மறைவு ஏற்படுத்திய வெற்றிடத்தை வேறு யாராலும் நிறைவு செய்ய முடியாது. 45 ஆண்டுகால எங்கள் நட்பு விலைமதிப்பற்றது.

எல்லாக் காலங்களிலும் எனக்கு உற்ற நண்பராக விளங்கி, எனது சுக, துக்கங்களிலும், ஏற்ற, இறக்கங்களிலும் எப்போதும் பங்கு கொண்டு வந்தவர் திரு. பாலா.

நான் மலாயாப் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்த காலக்கட்டத்தில்தான் முதன்முறையாக திரு. பாலாவைச் சந்தித்தேன். அப்போது, மலேசிய வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவராக இருந்து கொண்டே பாலா அவர்கள் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த போதுதான் எங்களின் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. முதல் சந்திப்பிலேயே இருவரும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டோம்.

நான் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது தலைமையில் மாணவர் குழு ஒன்றை தமிழகத்திற்கு அழைத்துச் செல்லத் திட்டமிட்டோம்.  அப்போது இந்தியப் பயண ஏற்பாடுகளைக் குறித்துப் பேசுவதற்கு திரு. பாலாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தேன். எங்களுக்கான சில வசதிகளைத் தமிழகத்தில் செய்து கொடுக்க ஏற்பாடு செய்தார். அதிலே முக்கியமானது, அன்றைய தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களோடு சந்திக்கவும் அவருடன் இரவு உணவு உட்கொள்ளவும் செய்து கொடுத்த அரிய ஏற்பாடு. நாங்கள் குழுவாக பயணம் மேற்கொண்ட அந்தச் சமயத்தில் அவரும் அங்கு வந்து சேர்ந்து எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுத்தார்.

தன்னிடம் ஆதரவு கேட்டு வந்தவர்களுக்கு முழு அளவில் உதவி புரிய வேண்டும் என்கிற அவருடைய உணர்வை நான் புரிந்து கொண்டேன். அந்தப் புரிதல் எங்களுக்கிடையே நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தியது.

நேர்மையையும் உண்மையையும் கண்களாகக் கொண்டவர் 

பாலா அவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பணிகளைக் கடமையோடும் பொறுப்புணர்வோடும் மேற்கொள்ளும் ஆற்றல் பெற்றவர். அதே சமயத்தில் மிகவும் கனிவானவர்; இரக்க சிந்தை கொண்டவர். நேரத்தைப் பொன்போல திக்கும் அவர், எந்த ஒரு சந்திப்பிற்கும் நேரத்தோடு வந்து கலந்து கொள்ளும் பழக்கத்தை எப்போதும் கடைப்பிடித்து வந்தவர். அதே சமயத்தில் மாற்றுக் கருத்துக்களை, யாருக்கும் தயங்காமல், முகத்தில் அடித்தாற்போல் நேரடியாகவே கூறிவிடும்  பண்பினைக் கொண்டவர். ஒருவர் தவறு செய்திருந்தால் அது யாராக இருந்தாலும் பின்வாங்காமல் தவறு என்று சுட்டிக் காட்டி விடுவார். இதனால் அவர்மீது பலர் முதலில் சங்கடப்பட்டாலும், நாளடைவில் அவரது நேர்மையையும், அவரது வார்த்தைகளில் பொதிந்திருந்த உண்மைகளையும் உணர்ந்து கொண்டு அவரை மதிக்கத் தொடங்கினர்.

சிறந்த குடும்பப் பின்னணியைக் கொண்டவர்

சிறந்ததொரு குடும்பப் பின்னணியைக் கொண்ட பாலா அவர்களின் தந்தையார் திரு. இராமானுஜம் அவர்களும் ஒரு சிறந்த குணாதிசயங்களை உடைய பெரியவர் ஆவார். காலப்போக்கில் பாலாவின் மூன்று சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் அவர்கள் குடும்பத்தினரும்கூட என்னுடன் நெருக்கமான நட்பையும் தொடர்புகளையும் கொண்டிருந்தனர்.

வானொலி, ஒலிபரப்புத்துறையில் சாதனை புரிந்தவர்

மலேசிய வானொலியிலும் ஒலிபரப்புத்துறையிலும் பாலா அவர்கள் புரிந்த சாதனைகளும் குறிப்பிடத் தக்கதாகும். ஆங்கிலமும் தேசிய மொழியும் முன்னணியில் இருந்த காலக்கட்டத்தில் வானொலியில் தமிழ் ஒலிபரப்பு மேம்படுத்தப்படுவதற்கும் நவீனமயமாக்கப்படுவதற்கும், தமிழுக்காக அதிக நேரம் ஒதுக்கப்படுவதற்கும் வானொலி தமிழ்ப் பிரிவின் தலைவராக இருந்த காலத்தில் போராடியவர்  திரு. பாலா. அவருடைய தலைமையின்கீழ் மலேசிய வானொலியின் தமிழ்ப் பிரிவு செயல்பட்ட காலக்கட்டம் ஒரு பொற்காலம் என்ற புகழாரம் இன்றைக்கும் பலராலும் சூட்டப்படுகின்றது.

வானொலியில் தமிழ் உச்சரிப்பிற்கும், பிறமொழிகள் கலவாமல் தமிழ் பேசப்படுவதற்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்தவர் பாலா. அவரது தலைமையில்தான் வானொலியில் முன்னாள் ம.இ.கா. தலைவர் துன் சம்பந்தன் அவர்களின் "ஒரு சொல் கேளீர்" என்ற நிகழ்ச்சி பிரபலம் அடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஐக்கிய நாட்டு சபை அமைப்பில் பணிபுரிந்தவர்

ஐக்கிய நாட்டு சபையின் முயற்சியால் மலேசியாவில் நிறுவப்பட்ட ஆசிய பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக பின்னர் நியமிக்கப்பட்ட பாலா, அந்தப் பதவியின் மூலம் பல வெளிநாட்டவர்களுக்கு, குறிப்பாக தென் கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவரகளுக்கு, ஒலிபரப்புத்துறையில் பயிற்சிகள் வழங்கும் பணியினை அந்தப் பதவியின்வழி ஆற்றி வந்தார். ஐக்கிய நாட்டு சபையின் ஓர் அமைப்பாக இந்த ஆசிய ஒலிபரப்பு மேம்பாட்டுக் கழகம் திகழ்ந்த காரணத்தால் பல வெளிநாடுகளுக்கும் சென்ற பாலா அவர்கள், அதன் காரணமாக ஒலிபரப்புத்துறையில் பல அனைத்துலக தொடர்புகளையும் கொண்டிருந்தார்.

தமிழ் மொழிமீது அளவிட முடியாத பற்றும் உணர்வும் கொண்டிருந்த பாலா, பல பொது அமைப்புக்களிலும் தீவிரமாக ஈடுபாடு காட்டி சமுதாயச் சேவையிலும் முன்னணி வகித்தவராவார்.

மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

நெடுங்காலமாக இராம சுப்பையா உபகாரச்சம்பள நிதி வாரியத்தின் தலைவராக இருந்து பல கலை நிகழ்ச்சிகளையும் முன்னின்று நடத்தி, அந்தக் கல்விநிதி வாரியத்திற்கு நிதி சேர்ப்பதில் உதவியிருக்கின்றார்.

திரு. பாலா நோய்வாய்ப்பட்டார் என்ற தகவல் எனக்குப் பேரிடியாக இருந்த்து. படிப்படியாக அவர் உடல் நலம் குன்றியது என்னை வேதனையில் ஆழ்த்தியது. அவர் இறந்த அன்றைய தினம் மாலை 6.00 மணியளவில் அவரது இல்லத்தில் சென்று கண்டேன். அவரால் பேச முடியவில்லை. நினைவு இழந்த நிலையிலேயே காணப்பட்டார்.

இந்த 45 ஆண்டு காலத்தில் என்னுடன் நட்பு பாராட்டியும், தவறுகளைச் சுட்டிக் காட்டியும், சுகதுக்கங்களிலும் பங்கு கொண்டு வந்த என்னுடைய இனிய நண்பர் உயிர் பிரியும் தருணங்களில் இருந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிக்குச் சென்றேன். ஒவ்வொரு மணி நேரமும் விசாரித்துக் கொண்டே இருந்தேன். இறுதியில் என் நண்பரின் உயிர் நம்மை விட்டுப் பிரிந்தது. அந்தப் பிரிவு என்னை இன்னமும் வாட்டிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கவலை வாழ்நாள் முழுவதும் எனக்கு இருக்கும். அந்த அளவுக்கு இந்த நட்பு மிகவும் இறுக்கமானது.

டத்தோ சி.சுப்ரமணியம்

நேர்மையானவர்

திரு.இரா பாலா அவர்களை என் தந்தைக்கு நிகராகப் போற்றி வந்தேன். அதற்குரிய தகுதிகளோடு அவர் விளங்கினார். தனக்கு நியாயம் எனப் பட்டதை முகத்திற்கு நேராக பேசக்கூடிய நேர்மையானவர் எனப் பிறர் சொல்லி நான் அறிந்திருக்கிறேன். சில சமயம் நானே நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஒரு புத்தக வெளியீடு. மலேசிய கதைகளை தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதைகளின் தொகுப்பு அது.

திரு. பாலா நூலை ஆய்வு செய்து பேசினார். "ஒரு நூலை ஆய்வு செய்கிறவர்கள் அதிலுள்ள குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும். அப்படிக் கூற தைரியமில்லாதவர்கள் நூலாய்வுக்கு வரக்கூடாது. என்னைப் பொறுத்தவரையில் இந்த நூலின் சிறப்புகளைக் கூறும் அதே வேளையில், குறைகளையும் சுட்டிக் காட்ட வேண்டும் என நினைக்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அக்குவேறு ஆணிவேறாகப் பிய்த்து எடுத்தார். எனக்குத் தெரிந்து இதுவரை யாரும் இப்படி உண்மைகளைப்  போட்டு உடைத்தது கிடையாது.

எழுத்தாளருக்கும் ஏற்பாட்டாளருக்கும் சங்கடமாக இருந்திருக்கும். ஆனாலும் திரு.பாலா நேர்மையாக நடந்து கொண்டார். அவரது அந்த நேர்மை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

டத்தோ பத்மாவுடன் அவர் கொண்டிருந்த பாசம், திரு.பாலா மீது டத்தோ பத்மா கொண்டிருந்த மரியாதை இவை அனைத்தும் திரு.பாலா மீதான மரியாதையை எனக்குள் அதிகரிக்கச் செய்தது. அவரது மறைவு என்னை அதிகளவில் கலங்கச் செய்திருக்கின்றது.

ஓம்ஸ். பா. தியாகராஜன்

நிறைகுடங்கள் என்றும் ததும்புவதில்லை...!

ஒருவரைப்பற்றி நாம் எழுதும்போது அவரைக் கொஞ்சம் மிகையாகவோ புகழ்ச்சியாகவோ எழுத வார்த்தைகள் இன்றி நாம் தடுமாறும்போதுதான் அந்த மனிதனின் பெருமையே ஆரம்பமாகிறது என்பது என் கருத்து.

உதட்டளவில் சிலர் பேசுவர். ஆனால், பெரும்பாலும் அவர்களின் சொல்லும் செயலும் அப்படியிருப்பதில்லை. உள்ளும் புறமுமாக இங்கே 100 விழுக்காடு சரியாக இருக்கும் மனிதர்கள் குறைவு.

ஆனால், தன் உள்ளம் நினைப்பதை தன் உதட்டில் யாருக்காகவும் எதற்காகவும் அஞ்சாமல் துணிவோடு பேசுகின்ற தகைமையாளர்கள்தாம் போற்றுதலுக்குரிய மனிதர்களின் வரிசையில் என்றும் நிலைத்து நிற்பர்.

அத்தகைய பெருமைக்குரியவர்களில் ஒருவர்தான் மதிப்புமிகு இரா. பாலகிருஷ்ணன் அவர்கள். அவர் என்னை அறிந்து நான் அவரைப் புரிந்து கொண்ட நாள்முதல் என் இதயத்தில் இமயமாக எழுந்து நின்ற மகத்தானவர்களில் ஒருவர் அவர். ஒரு தூரத்து நிலவை எட்ட நின்று ரசித்து நேசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன்.

ஒலிபரப்புத் துறையிலும் தகவல் துறையிலும் அப்பழுக்கு இல்லாத அனுபவம் பெற்றவர். தமிழ் மொழிக்கும் தன்னைச் சார்ந்த இந்த சமுதாயத்தின் உயர்வுக்கும் தம்மைச் சுற்றியிருந்த பலருக்கும் எண்ணற்ற மாணவர்களின் உயர்வுக்கும் அவர் ஆற்றியுள்ள சேவைகள், அவர் செய்துள்ள உதவிகள் பலபேருக்குத் தெரியாது.

குரல் மட்டும் கேட்டு தன் முகத்தைக் காட்டாத அந்தக் குயில்போல செய்த உதவிகளைச் சொல்லிக் காட்டாத- தம்பட்டம் அடித்துக் கொள்ளாத - அதை வைத்து விளம்பரம் தேடிக் கொள்ளாத- சொல்லும் செயலுமாக வாழ்ந்து வந்த பெருந்தகை அவர்.

மலேசிய வானொலியில் அவர் இருந்த காலம் ஒரு பொற்காலம் என்று இன்றும் சொல்கிறார்கள். ஆனால், இந்தப் பொற்காலத்தைப் படைக்க எத்தனை பேரின் பொல்லாப்புகளையும் எத்தனை இடர்கள் - சிக்கல்- தடைகளையும் அவர் சந்தித்திருப்பார் என்று நான் யோசித்துப் பார்க்கிறேன்.

அவர் காலத்தில் மலேசிய வானொலியில் தமிழ் வாழ்ந்தது என்று சொல்பவர்களின் புகழுரைகள் அவருக்கு வீசும் வெண்சாமரம் அல்ல! தமிழ்மீது கொண்ட அந்த ஆழ்ந்த பற்றினால் ஒரு  தேர்ந்த படிப்பாளி தன் வீடு, தன் பிள்ளை, தன் குடும்பம் என்ற குடும்ப எல்லைகளை விட்டு அதை இந்தச் சமுதாயத்திற்கு அர்ப்பணித்ததால் விளைந்த ஒரு மகத்தான சேவையிது!

அவரது பரந்து விரிந்த அனுபவத்தால்தான் ஐ.நா.வின் கீழ் செயல்பட்ட ஆசிய பசிபிக் ஒலிபரப்புக் கழகத்தின் இயக்குநராக இருந்த ஒரே தமிழர் என்ற பெருமை நமக்குக் கிடைத்தது. இதன்பின்னர் இராம சுப்பையா உபகாரச் சம்பள அறவாரியத்தின் மூலமும் மாஜூ ஜெயா கூட்டுறவின் மூலமும் பேங்க் பூரோ இயக்குநர் என்ற முறையிலும் இந்தச் சமுதாயத்தின் உயர்வுக்காக அவர் ஆற்றிய தொண்டுகள் பல.

அவர் மேடைக்கு வந்தது குறைவு. ஆனால், எந்த மேடையில் ஏறினாலும் அவர் அனுசரித்த அந்த அஞ்சாமை, அலங்காரம் இல்லாத அவரது ஆத்மார்த்தமான பேச்சு, இனிப்பு முலாம் பூசாத அவரது விமர்சனங்கள், கருத்துகள், எதையும் அளந்து- ஆழ்ந்து சரியாகச் சொன்ன செறிவான சிந்தனைவளமிக்க பேச்சுகள் என்றும் நம் நினைவில் இருப்பவை.

ஒரு பத்திரிகையாளனாக நான் தொடங்கிய பயணத்தில், 'தமிழோசை' தொடங்கி இன்றைய 'மக்கள் ஓசை' வரை நான் அவரை அறிந்திருந்தாலும், அவரை இன்னும் நெருக்கமாக அறியும் வாய்ப்பு 'மக்கள் ஓசை'க்கு நான் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றது முதல் தொடங்கியது.

எங்கள் வாரியத்தின் தலைவர் அவர். ஆனால், இதையெல்லாம் கடந்து பத்திரிகையாளர்கள் எப்படியிருக்க வேண்டும்; எதைச் செய்ய வேண்டும்; எப்படியெல்லாம் எழுதவேண்டும் என்று ஒரு தந்தையைப் போல தோளில் அரவணைத்து ஆலோசனைகள் சொல்லும் நேசமிக்க நல்ஆசான் அவர்!

ஒரு திறமையைக் கண்டால் மறவாது அழைத்து வாழ்த்தும் அன்புள்ளம் நிறைந்தவர். தவறுகள் கண்டால் தவறாமல் அதை எடுத்துரைக்கவும் தயங்காதவர்.

நிறைகுடங்கள் எப்போதும் ததும்புவதில்லை..... ஆனால், நான் சொல்வேன்; மறந்தும் அவை சிந்துவதும் இல்லை.

எம். இராஜன், தலைமை ஆசிரியர், 'மக்கள் ஓசை'

பாலாவை இழந்த கணங்களில்......

இரா. பாலகிருஷ்ணன் வானொலியில் பணியாளராகச் சேர்ந்த அதே 1961இல்தான் நானும் அங்கு வேலைக்குச் சேர்ந்தேன். அவருக்கு ஒரு மாதம் பின்னர் சேர்ந்தேன். மலேசிய வானொலியின் அலுவலகம் அப்போது செலாங்கூர் கிளப் அருகில் அமைந்திருந்த ஃபெடரல் ஹவுஸ் கட்டிடத்தில் 5ஆம் 6ஆம் மாடிகளில் இயங்கி வந்தது. 5ஆம் மாடி அலுவலகமாகவும் 6ஆம் மாடி ஒலிப்பதிவு/ஒலிபரப்பு ஸ்டுடியோக்களாகவும் செயல்பட்டு வந்தன.

பாலா பட்டதாரியானதால் விரைவில் இந்தியப் பகுதிக்குத் தலைவராகி விடுவார் என்ற பேச்சு எல்லார் வாயிலும் அடிபட்டது. அதோடு மலேசிய வானொலியின் துணை இயக்குநரான (பின்னர் தலைமை இயக்குநர்) டோல் ராம்லிக்கு அவர் நண்பர் என்பதால் பிற இனத்து ஒலிபரப்பாளர்களுக்கும் அவர் மீது மரியாதையும் இருந்தது.

பாலா எல்லோரோடும் அன்பாகப் பழகுவார். சமவுரிமை கொடுத்துப் பழகுவார். வானொலிக்கும் கலை உலகுக்கும் புதியவரானாலும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களோடு இரவு நேரங்களில் ஸ்டுடியோவில் நெடு நேரம் இருப்பார். அப்புறம் அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டுபோய் சாப்பாடும் வாங்கிக் கொடுப்பார். மிக நேரமாகிவிட்டால் எங்களை வீட்டிலும் கொண்டு விடுவார்.

விரைவிலேயே பாலாவுக்குப் பகுதியின் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. அந்த நாற்காலியில் முழுத் தகுதியோடு அமர்ந்து பதவிக்குப் பெருமை தேடிக் கொடுத்தவர் அவர்தான்.

தலைநகர் வாழ்வின் ஆக்ககரமான அம்சங்களை நான் பாலாவிடமிருந்துதான் கற்றுக் கொண்டேன். தன்னம்பிக்கை, உழைப்பு, முன்னேற்றம், சகோதரத்துவம், நட்பு ஆகியவற்றின் உன்னத பரிமாணங்கள் பாலாவிடம் கண்டேன். என் வாழ்வில் நான் அதுவரை சந்தித்த மனிதர்களிடமிருந்து அவர் வேறுபட்டவராக இருந்தார். அவருடைய ஆளுமை வியக்கவைப்பது; கண்டவரை ஈர்த்துக் கொள்ளுவது.

பாலாவின் காலத்தில் வானொலி இந்தியப் பிரிவு மிகுந்த வளர்ச்சி கண்டது. ஒதுக்கப்பட்டும் கவனிக்கப்படாமலும் இருந்த பல அம்சங்களில் பாலா துணிச்சலாகப் பேசி முன்னேற்றங்களை ஏற்படுத்தினார்.

ஒலிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளுக்கு அதிக நிதியைப் போராடி வாங்கினார். முழு நேர, பகுதி நேர அலுவலர்களை அதிகப்படுத்தினார். கலைஞர்களுக்கு சன்மானத்தை உயர்த்தினார். புதிய நிகழ்ச்சிகளுக்கான கருத்துக்களை யார் முன்வைத்தாலும் ஆதரித்து உற்சாகப்படுத்தி செயல்படுத்தச் செய்தார்.

பாலா பல்கலைக்கழகத்தில் நல்ல தமிழாசிரியர்களிடம் தமிழ்ப் படித்து வந்தவர். பேராசிரியர் ராஜாக்கண்ணு போன்றவர்கள் அவருக்குத் தமிழறிவை ஊட்டியது மட்டுமின்றி தூய தமிழின்பாலும், முறையான உச்சரிப்பின் மீதும் ஒரு காதலையே உண்டாக்கியிருந்தனர். ஆகவே மலேசிய வானொலியில் மொழியைப் பொறுத்த அளவில் நிலவிய ஏனோதானோ நிலைமையை அவர் சீர்படுத்தினார்.

1970 வாக்கில் பாலாவுக்கு மலேசிய வானொலி புதிய பொறுப்புக்களைக் கொடுத்தது. வானொலிக்கான தேசியப் பயிற்சி நிலையம் (இன்று IPTAR) ஒன்றை அமைக்கும் பணியை அவர் ஏற்றார். இந்தப் பணியை அவர் ஏற்று நடத்திய காலத்தில் இந்தப் பயிற்சி நிலையத்தை மையமாக வைத்து ஆசிய/பசிஃபிக் ட்டாரத்துக்கான ஒலிபரப்புப் பயிற்சி நிலையம் (இன்றைய AIBD) அமைக்கவும் முற்பட்டார். இன்றும் இயங்கிவரும் இந்த இரு நிலையங்களும் இவரின் விடாமுயற்சி, விவேகம், தன்னம்பிக்கை, திறமை இவற்றின் அடிப்படையில் எழுந்தவையாகும். ஆசிய/பசிஃபிக் ஒலிபரப்புப் பயிற்சி நிலையத்தை நிறுவ அவர் யுனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து செயற்பட்டபோது அவருடைய செயல்திறன் உலகமெங்கணும் பரவுவதாயிற்று. ஓர் அனைத்துலக அமைப்பை நிறுவக்கூடிய இலட்சியக் கனவு, பெரிதாகச் சிந்திக்கும் மனம், தடைகளை உடைத்தெறியும் வன்மை, எண்ணியதை அடையும் திண்மை, பின்னடைவில் உடைந்துவிடாத விவேகம் ஆகிய அவரின் சிறப்பியல்புகள் வெளிப்பட இந்த அனைத்துலகப் பணி அவருக்கு உதவியது. அந்த நிலையத்தில் மிகத்திறமையான வெளிநாட்டு நிபுணர்களை அமர்த்தி ஒலிபரப்புப் பயிற்சித்துறையில் பல புதுமைகளையும் புகுத்தி அதன் அனைத்துலகத் தரத்தை உயர்த்தியதில் பாலாவுக்கே முதன்மைப் பங்கு உண்டு. இந்தக் காலத்தில் project management என்று சொல்லப்படும் நிபுணத்துவத் துறையில் பாலா சிறந்து விளங்கினார்.

பாலாவின் ஒலிபரப்பு பயிற்சித் துறைச் சேவைகளுக்காக கானடா நாட்டின் ரையர்சன் அறக்கட்டளை (Ryerson Foundation)  பாலாவுக்கு 1988இல் அதன் ஃபெல்லொஷிப் விருதளித்துக் கெளரவித்தது. இந்த மிக உயரிய விருதைப் பெற்ற ஒரே மலேசியர் பாலாவே ஆவார்.

தனது பதவிக்கும் அதிகாரத்துக்கும் வெளியேயும் பாலா நிறைந்த நண்பர்களையும் அன்பர்களையும் பெற்றிருந்தார். சமுதாய அக்கறை அவருக்கு நிறைய இருந்தது. அரசியலில் துன் சம்பந்தன் அமைச்சராக இருந்த காலத்தில் பாலா அவருக்கு உற்ற நண்பர். துன் அவர்களின் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்க அமைப்புக் காலத்தில் மலேசிய வானொலி மூலம் அவர் நிறைந்த விளம்பரங்களும் பிரச்சாரங்களும் செய்ய இடம் கொடுத்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் வானொலியில் "ஒரு சொல் கேளீர்" என்று துன் அவர்களின் நல்லுரையை அவர் இடம்பெறச் செய்ததும் உண்டு.

துன்னுக்குப் பின் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் காலத்திலும் பாலா அவருக்குத் துணையாகவும் ஆலோசகராகவும் இருந்தார். அரசியலில் நுழைந்த அறிவார்ந்த பட்டதாரிகளான டத்தோ பத்மநாதன், டத்தோ சுப்பிரமணியம் ஆகியோர் பாலாவின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்பட்டனர். டத்தோ வி.எல்.காந்தனின் அரசியல் நுழைவுக்கும் ஆதரவாக இருந்தார். இவர்கள் மூவரும் தொடர்ந்து பாலாவின் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்தனர்.

ஒரு வகையில் பாலாவின் அன்பு வலை இந்தியச் சமுதாயத்தில் முக்கியமானவர்கள் அனைவரையும் பின்னியிருந்தது என்று சொல்லலாம். கே.எல். இந்திய சமூகத்தில் அவரை அறியாதவர் எவருமில்லை என்ற ஒரு நிலைமை இருந்தது.

பாலாவைக் கண்களுக்குப் பக்கத்திலேயே வைத்து நான் பார்த்துக் கொண்டிருந்ததால் அவருடைய பெருமைகள் எனக்குப் பிரமிப்பை ஊட்டியிருக்கலாம். ஆனால் பாலா நோயால் சாய்ந்துவிட்ட நாட்களில் அவரைப் பார்க்கவும் விசாரிக்கவும் வந்த நண்பர்களை, பிரமுகர்களைப் பார்த்தபோது, அவர்களுடன் பேசியபோது, அவரின் அன்பு வலை எத்தனை விரிவானது என்பதும், அவரது ஆளுமை பற்றிய எனது பிரமிப்பு நானாகக் கற்பித்துக் கொண்டதல்ல என்பதும் எனக்கு உறுதிப்பட்டது. அவரின் இறப்பின் போது வந்து குவிந்த மனிதர்கள், அவர்கள் அங்குப் பகிர்ந்து கொண்ட செய்திகள், மலர்மாலைகள், செய்திகள் ஆகியவற்றைக் கண்டபோது பாலாவின் இழப்பை இந்தச் சமூகம் எத்தனை சோகத்துடன் எதிர்கொண்டிருக்கிறது என்பதும் புரிந்தது.

அவர் திருமேனி தகனத்துக்கு இயந்திரத்தின் உட்சென்ற வேளையில் என் வாழ்வின் ஒரு பகுதியும் எரிந்துபோனது என உணர்ந்தேன்.

எனினும் எந்த மனிதரின் மரணத்திலும் - அவர் எத்தனை உயர்ந்தவராயினும்- மற்றவர்களின் வாழ்க்கை திகைத்துப் போய் நின்றுவிடுவதில்லை. காலம் தானாக நம்மை வாழ்க்கை ஓட்டத்தில் தள்ளுகிறது. இருப்பினும் மீதியுள்ள நாட்களை ஒரு தளர்ச்சியுடனும் வெறுமையுடனும்தான் எதிர்கொள்ளுகிறோம், அதுவும் நிற்கும் நாள் வரும் என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்தியவாறு....

முனைவர் ரெ.கார்த்திகேசு

முன்னாள் ஆர்.டி.எம்.ஒலிபரப்பாளர்

எங்கள் தானைத் தலைவர் திரு.இரா.பாலகிருஷ்ணன்

1978ஆம் ஆண்டு முதல் ஒரே வளாகத்தில் பணியாற்றியிருந்த போதிலும் திரு.இரா.பாலகிருஷ்ணன் அவர்களை நான் அடிக்கடி சந்தித்தது கிடையாது. இந்த துறையிலிருந்து அவர் பணி ஓய்வு பெற்ற பிறகே அவரை அடிக்கடி சந்தித்துப் பேசிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. பிறகு என் மைத்துனரின் திருமணப் பந்தத்தின் வழி திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு உறவினனும் ஆனேன்.

அவரது கம்பீரம், மிடுக்கு, அறிவாற்றல், பேச்சுத்திறன், நேரம் தவறாமை, துணிச்சல் ஆகிய குணங்கள் என்னைப் பெரிதும் கவர்ந்தன. திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் எல்லாரையும் அவரவரின் முழுப்பெயர் சொல்லியே அழைப்பதுபோலவே என்னையும் அழைப்பார். தமிழ்மொழியில் அவருக்கிருந்தப் பற்றைக் கண்டு எல்லாரையும் போல் நானும் கவரப்பட்டேன். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் இறுதியில் எங்களுக்குள் வானொலி ஒலிபரப்பு தொடர்பான கருத்துப் பரிமாற்றம் ஏற்படுவதுண்டு, ஆனால் எந்த தருணத்திலும் கருத்துகளை வலிய புகுத்தமாட்டார். எனினும் அவர் கூறும் கருத்துகள் இயற்கையாகவே நம் மனத்தில் பதிந்துவிடும்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வானொலியின் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி 'வானொலி முன்னோடிகள்' என்ற தொடர் ஒலிபரப்பப்பட்டது. அத்தொடரில் திரு.இரா.பாலகிருஷ்ணன் அவர்களுடைய நேர்காணல் முதலில் ஒலியேறியது. அப்பேட்டியினை நமது நிலையத்தைச் சேர்ந்த இராஜேஸ்வரி இராஜமாணிக்கம் மிகவும் சிறப்பாகச் செய்திருந்தார். அப்பேட்டிக்குப் பிறகு திரு.இரா.பாலகிருஷ்ணன் அவர்கள் அவருக்கே  உரிய பாணியில் "That was a good interview" என்று புகழ்ந்தது என்றும் நினைவில் நிழலாடத்தக்கது.

"தம்மில் பெரியார் தமரா ஒழுகுதல்

வன்மையுள் எல்லாம் தலை" 

எனும் வள்ளுவன் வாக்குக்கொப்ப தமிழ் ஒலிபரப்புத்துறையில் பாலாவின் சுவடுகள் நமக்கு வழிகாட்டியாக அமைந்திருக்கும் என்பது திண்ணம்.

ப. பார்த்தசாரதி

தலைவர், மின்னல்FM

பட்டைத் தீட்டினார்

மலேசிய வானொலி இந்தியப் பகுதிக்குத் தலைவராக இருந்தபோது ஒவ்வொரு வாரமும் பணியாளர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தை நடத்துவார் பாலா. அந்த வாரம் முழுவதும் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதைச் சுட்டிக் காட்டுவார்.

இன்றைக்கு வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவது யார் என்ற அச்சத்துடன்தான் கூட்டத்திற்குப் போவோம். ரொம்ப கடுமையாக இருப்பார். தவறுகளைச் சுட்டிக் காட்டுவதோடு, திருத்திக் கொள்ளவும் வழிகாட்டுவார்.

வாராந்திரக் கூட்டம் என்பது எங்களைப் பட்டைத் தீட்டிக் கொள்ளும் பட்டறையாக அமைந்தது. அவருடன் பணியாற்றிய காலம் இனிமையானது. இனி வராது.

துளசி கிருஷ்ணன்

முன்னாள் RTM ஒலிபரப்பாளர்

எங்கள் தலைவரை எங்கே........ 

எங்கள் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       தங்கமாய் மின்னிச் சரித்திரம் படைத்தவர்

       சிங்கமாய்ச் சீறிச் சிலிர்த்து நின்றவர்

       பங்கமே காணாத பகலவன் போன்றவர்      

       பக்கத்தில் வைத்தெமைப் பக்குவம் செய்தவர்!

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       தாய்மொழி வேறானாலும் தமிழுக்குத் தொண்டுசெய்யும்

       வாய்ப்பினைப் பொன்போல் போற்றி வானளவு ஓங்கச்செய்தார்

       காயமும் மனமும் வாக்கும் கனிவான தமிழே என்று

       ஓயாமல் எண்ணிப் புதுமை ஊட்டிய உலகத் தமிழர்

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       குறைகளைக் கண்டால் போதும் கொம்பனே வந்தால்கூட

       குற்றமே எனமுழங்கும் கொள்கையில் குன்றம், இங்கே

       அரசியல் தலைவர்க்கெல்லாம் அரிச்சுவடி கற்றுத் தந்தும்

       அரசியல் வேண்டாம் என்று அடக்கமாய் ஒதுங்கி நின்றார்!

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       இரும்புபோல் தோற்றம் எனினும் இதயத்தில் குழந்தை நெஞ்சம்

       எவர்வந்து உருகினாலும் இளகி ஏமாந்து போவார்

       கரும்புபோல் பேசிச் சிரிக்கும் கயவரைத் தெரிந்துகொள்ளும்

       திறன்மட்டும் இல்லாமல்போய் செல்வத்தை இழந்ததுண்டு

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       போட்டிகள் நடத்தும்போது பொலிவோடு கலந்துகொள்வார்

       புறப்பட்ட கணத்திலிருந்தே புலியெனப் பாய்ந்துசெல்வார்

       பேட்மிண்டன் என்றால் போதும் பாலாவின் ஷ்மேஷ்தான் வெல்லும்

       காற்பந்து விளையாட்டென்றால் குழுவுக்கே அவர்தான் ஸ்ட்ரைக்கர்!

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       ஆங்கிலப் பேச்சைக் கேட்டால் அமெரிக்கன் அசந்து நிற்பான்

       ஆயினும் தமிழே எனது உயிர் என முழங்கி

       தேங்கிய தமிழைத் தூக்கித் தேன்மொழி ஆக்கச் செய்தார்

       தூங்கியே வழிந்த முதுமைத் தோள்களும் நிமிரச் செய்தார்!

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       அழுதிடத் தெரியாத் தலைவர், சிரிப்பிலும் கஞ்சம் எனினும்

       அகத்திலோ அன்புப் பாசம் அளவின்றிக் கொஞ்சி வழியும்

       பழுதிலா உழைப்பைப் பார்த்தால் பரிவுடன் தட்டிக் கொடுத்துப்

       பதவியும் பகிர்ந்தளித்துப் பட்டென மறந்தும் போவார்!

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

       வானொலித் தமிழை உலகம் வாழ்த்தியே வணங்கச் செய்து,

       வானொலிமூலம் நாட்டை இனத்தையும் உயர்த்தி வைத்து,

       ஞானமாய்ப் பாடம் சொன்ன நற்றமிழ்த் தலைவர் இன்று

       கானமாய்க் கமழ்ந்து நிற்க, கண்களில் மறைந்து போன....

அந்தத் தலைவரை எங்கே? எங்கள் வானொலித் தலைவரை எங்கே?

மைதீ. சுல்தான்

முன்னாள் ஒலிபரப்பாளர்

பாலாவை நினைக்கையில்........

நான் வேலைக்குச் சேருமுன்னர் எல்லாரையும் போலவே குரலாய்வு, எழுத்துச் சோதனை, நேர்முகச் சோதனை போன்றவற்றுக்குச் சென்றேன். பிறகு வேலை நியமனக் கடிதமும் வந்தது. அதில், வேலையை ஒப்புக்கொள்ளும் நாளைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்ததுடன் ஒரு மருத்துவச் சோதனைக்குச் செல்லுமாறும் கூறப்பட்டிருந்தது. மருத்துவச் சோதனைக்குச் சென்றதுடன் 1966 மார்ச் முதல் நாள் வேலையை ஒப்புக்கொள்வதாகவும் குறிப்பிட்டுக் கடிதம் அனுப்பினேன். அதற்குப் பதில் வருமென்று காத்திருந்தேன். மார்ச் மாதமும் வந்துவிட்டது, பதில் ஒன்றும் வரவில்லை. அப்போது பினாங்கு துறைமுக ஆணையத்தில் வேலை செய்து கொண்டிருந்ததால் அதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படவில்லை.

பின்னர் ஒரு நாள் பினாங்கில் தமிழ் நிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பதிகாரியாக இருந்த திரு. எம்.எஸ்.சுவாமிநாதன் வீடு தேடி வந்தார். "மார்ச் முதல் தேதி வேலைக்கு வருவதாக எழுதிய நீ, ஏனப்பா வரவில்லை?" என்று கேட்டார். எனக்கு அந்த அரசாங்க நடைமுறை தெரியாததை அவரிடம் எடுத்துரைத்தேன். "உனக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து வர இந்தியப் பகுதித் தலைவர் பாலா என்னை அனுப்பினார். அதுதான் உன்னைத் தேடி வந்தேன்" என்றார்.

என்னைப் பற்றி பாலாவுக்குத் தெரியாது. இருந்தாலும், வேலைக்கு வருகிறேன் என்று கூறிய பையன் வராமல் போனது ஏன் என்பதைக் கண்டறிய ஆள்விட்டு அனுப்பிய அவரது அக்கறையை என்னவென்று சொல்வது! அச்சம்பவத்தால் பாலாவைப் பார்க்கும் முன்பே பாலாவைப் பற்றி ஓர் உயர்வான எண்ணம் என் மனத்தில் அசைக்க முடியாதபடி படிந்து விட்டது.

பி.இராமச்சந்திரன்

முன்னாள் ஒலிபரப்பாளர்.

பாலாவின் காலம் பொற்காலம்

மலேசிய வானொலியின் பொற்காலம் அவர் தலைவராக இருந்த காலம். தமிழ் மல்லிகை மலராகக் கொட்டிக் கிடந்த காலமது. அறுபதுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் வேலை செய்து வந்த காலமது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

பட்டைத் தீட்டப்படாமல் எங்கெங்கோ கிடந்த வைரங்கள் எல்லாம் பட்டைத் தீட்டிப் பிரகாசிக்க வைத்தவர் பாலா. தமிழ்மீது சொல்ல முடியாத பாசத்தை வைத்திருந்தார் பாலா. அதன் காரணமாக எந்த நிகழ்ச்சி யாருக்குப் பொருத்தமானது, எந்த சாரீரம் எவருக்குப் பொருந்தும் என்று தெரிந்து அதை அவரிடம் ஒப்படைப்பார்.

1970ஆம் ஆண்டு வானொலி நாடகத்தின் உச்சக்கட்டம். சமூக நாடகமானாலும் சரி, கிராமிய நாடகமானாலும் சரி, இலக்கிய நாடகமானாலும் சரி, புராண நாடகமானாலும் சரி, ஒரு நாடகத்துக்குரிய இலக்கணத்துக்கு உட்பட்டே இருக்கும். தமிழைப் பிழையில்லாமல் பேசி நடித்த காலம் அது.

இன்று இந்திய தொலைக்காட்சி தாடகத் தொடர்களைப் பார்ப்பதுபோல் அன்று 40 ஆண்டுகளுக்கு முன்பு மலேசிய வானொலியின் ஒவ்வொரு படைப்பையும் கேட்டு இரசிக்க நேயர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

செய்தியாக இருந்தாலும், நாடகமாக இருந்தாலும், வேறு எந்தவொரு தயாரிப்பாக இருந்தாலும், அதன் நிலையை உயர்த்தி நிறுத்தியவர் பாலா.

அவரது காலத்தில் வானொலியில் ஆயிரக்கணக்கான மெல்லிசைப் பாடல்கள் உருவாக்கப்பட்டன.

வானொலி நிலையம் பெடரல் ஹவுஸில் இருந்தபோதுதான் நான் வேலைக்குச் சேர்ந்தேன். மாதம் 32 பாடல்களுக்கு இசை அமைக்க வேண்டும். சம்பளம் ரிம 300 என்றார். இது தவிர, பொங்கல், தீபாவளி, வருடப் பிறப்பு, தொழிலாளர் தினம் போன்சிறப்பு நாள்களின்போதும், அந்தந்த நாள்களுக்கு ஏற்ப பாடல்களை உருவாக்க வேண்டியிருந்தது. ஆக்க்கூடி, ஆண்டுக்கு 400 பாடல்களுக்குக் குறையாமல் உருவாக்க வேண்டியிருந்தது.

அந்த நிர்ப்பந்தத்தால் இன்று உயர்ந்து நிற்கிறேன்.

ஒவ்வொருவரின் திறமையையும் மனம் திறந்து பாராட்டும் நல்ல குணம் படைத்தவர் பாலா. தமிழ் மொழி விஷயத்தில் யார் தவறு செய்தாலும் 'ஆளை மாத்துங்க' என்று சொல்லி விடுவார் பாலா. அதனால் நாங்களும் மொழி விஷயத்தில் கண்டிப்பாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது.

காரைக்கிழார் எழுதிய 'நாணல்போல் ஆடும் விழி. நாணம் பேசிடும் வானில் நிலவுபோல வந்து வந்து இன்பம் பாடுமே' என்னும் பாடலைப் பாட பந்திங் ஜோசப் அவர்களை அழைத்திருந்தேன். அவரால் 'நாணல்,' 'நாணம்' ஆகிய சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியவில்லை. ஆறு மாதப் பயிற்சிக்குப் பிறகுதான் சரியாகப் பாடி முடித்தார்.

பாலாவிடமிருந்த கண்டிப்புத்தான் பல நல்ல கலைஞர்களையும் நல்ல தமிழையும் வளர்த்துவிட்டது. அவரது தலைமைத்துவத்தில் நல்ல பல திறமைசாலிகள் உருவானார்கள்.

வேலை நேரத்தில் கண்டிப்பானவர். மற்ற நேரங்களில் அன்பான மனிதர்.

ஒரு மனிதருக்குக் கிடைக்க வேண்டிய அத்துணை சிறப்புகளும் அவருக்குக் கிடைத்துவிட்டன. அந்த மனிதரை மீண்டும் பார்க்க முடியாது. ஆனால், மலேசிய வானொலி உள்ளவரை அவர் பெயர் மறையாது.

இசைத்தென்றல் டி.என். மாரியப்பன்

முன்னாள் ஒலிபரப்பாளர்

தமிழ் மொழி வேந்தன் திரு.இரா.பாலகிருஷ்ணன்

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அதன் பயன்பாட்டிற்கும் பாடுபட்டவர்கள், அயராது உழைத்தவர்கள் என்றும் மக்கள் நினைவில் நிலைத்திருப்பார்கள். அவ்வகையில் திரு.பாலகிருஷ்ணன் தமிழை நேசிப்போர் மனத்தில் என்றும் நிலைத்திருப்பார்.

பாலா அவர்கள் மலேசிய வானொலியின் இந்தியப் பகுதியின் தலைவராக இருந்தபோது தமிழ் ஏற்றம் கண்டது. மொழிவளம் மேம்பட்டது. அதனால்தான் அவர் சேவை ஆற்றிய காலம் 'தமிழ் மொழியின் பொற்காலம்' எனப் பலராலும் போற்றப்படுகின்றது. முறையான உச்சரிப்பு, மொழிவளம், குரல் தரம், பேச்சுத் திறன், கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு முதன்மை அளித்து, அந்த அடிப்படையிலேயே அறிவிப்பாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். பாலாவின் காலத்தில் நடப்பில் இருந்த நடைமுறைகள், விதிமுறைகள் எக்காலத்திற்கும் பொருந்தும். இவற்றை நாம் பின்பற்றி வருகிறோமா என்பது கேள்விக்குறியே.

1.2.2006 அன்று அன்று நடைபெற்ற இரண்டாவது ஒன்றுகூடும் நிகழ்வில் திரு.பாலகிருஷ்ணன் கூறியது என் நினைவுக்கு வருகிறது;

         "ஒலிபரப்புத்துறைக்கு வரும் புதியவர்கள் தமிழுக்குத் தொண்டாற்றுபவர்களாக இருத்தல் வேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் தவறில்லை. அப்படி அவர்கள் இல்லாதிருப்பது வருத்தம் தருகிறது. அந்த வகையில் தமிழ் ஒலிபரப்பு தொடர்பாக அதிருப்தி நிலவுகிறது. வானொலி அறிவிப்பாளர்களில் ஒருசிலர் தங்களை விளம்பரப்படுத்துவதில்தான் மிகுந்த நாட்டம் காட்டுகிறார்கள். சமுதாய நலனிலும் மொழி வளர்ச்சியிலும் அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை."

தமிழ் மொழியின் மேம்பாட்டிற்குப் பாடுபட்ட பாலா அவர்கள் அத்துடன் நின்றுவிடாமல், பல்வேறு அமைப்புகளின் வழி வசதி குறைந்த மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கி பல்கலைக்கழகம் போவதற்கும் வழிவகுத்தார். உயரிய நிர்வாகத் திறன், நேர்மை, விருந்தோம்பல் பண்பு, தன்னுடன் இருப்பவர்களை அவருக்கே உரித்தான பாணியில் அறிமுகம் செய்து வைப்பது, நண்பர்களின் மேம்பாட்டில் அக்கறை போன்ற மற்றும் பல நற்பண்புகளைக் கொண்ட திரு.பாலகிருஷ்ணன், நம் நினைவில் என்றும் நீங்காது நிற்பார்.

எம்.ஷண்முகநாதன்

முன்னாள் ஒலிபரப்பாளர்

பண்புக்கு இலக்கணம் எங்கள் பாலா

தமிழ்ப் பத்திரிகைத் துறைக்கு வருவதற்கு முன்னர் மரியாதைக்குரிய இரா.பாலகிருஷ்ணன் பற்றி சகோதரர் இரா.மாசிலாமணி நிறையச் சொல்லி இருக்கிறார். பத்திரிகைகளிலும் அவர் பற்றிய செய்திகள் வரும் "மாஜூ ஜெயா  கூட்டுறவுக் கழகம் மூலமாக..

1992ஆம் ஆண்டு மலேசியப் பத்திரிகைக் கழகம் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் பயிற்சிக் கருத்தரங்கில்தான் தலைவர் பாலாவை முதன் முதலாகச் சந்தித்தேன்.... உரையாடினேன். கனிவான பேச்சு.. மிகுந்த மரியாதை.. சிரிக்காமல் பேசும் நகைச்சுவைப் பேச்சு. தமிழ் மொழியைத் தமிழாகப் பேச வேண்டும். ஆங்கிலத்தை ஆங்கிலமாகப் பேச வேண்டும். உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும். எதுவரினும் எடுத்துரைக்கும் கருத்தை ஆணித்தரமாகச் சொல்ல வேண்டும்.

'இதுதான் எங்கள் தலைவர் பாலா' என்று நினைக்கும் அளவுக்கு - என் மனத்தில் பதியும் அளவுக்கு உயர்ந்த மனிதராக - மாமனிதராக வாழ்ந்தார்.

சிறிது காலம் மாஜூ ஜெயாவில் பணியாற்ற வாய்ப்புக் கிடைத்தது. தலைவர் பாலாவுடன் அதிகமாக நெருக்கம் ஏற்பட்டது. தொலைபேசியில் எப்படி உரையாட வேண்டும் என்பதற்கும், நேரம் தவறாமை என்பதற்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர் பாலா சார்.

'மக்கள் ஓசை' வாரியத் தலைவராக எங்களை வழிநடத்திய பாலா சார் அலுவலகம் வந்தால் ஒரு பயபக்தி பணியாளர்களிடையே இருந்ததுண்டு. அன்பொழுக "பாலா சார்- சேர்மன் பாலா - தலைவர் பாலா" என்று அவரை அறிந்தவர்கள் அழைப்பது வழக்கம். ஆனாலும் 'ரேடியோ பாலா' என்று கூறக் கேட்கும்போது, அதுவோர் இனிமையாகத்தான் இருக்கும்.

ஒருமுறை பாலா சாரோடு பேசிக் கொண்டிருக்கும்போது, "வானொலியில் அறிவிப்புப் பணி செய்பவர்கள் தங்களைக் கலாச்சாரக் காவலர்கள் என்று நினைத்துக் கொண்டு அறிவிப்பச் செய்கிறார்களே" என்று கூறியபோது, அந்த உண்மை இப்போதுதான் தெளிவாக எனக்கு உரைத்தது. இப்படி எத்தனையோ சம்பவ உரையாடல்களில் பாலா சாரோடு கலந்துள்ளேன்.

இத்தனைக்கும் தமிழ்தான் அவர் மூச்சாக இருந்து வந்தது. தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்கள் மலாயாப் பல்கலைக்கழகத்தில் 'தமிழ் எங்கள் உயிர்' என்று முழங்கியபோது, முதல் தமிழ் முழக்கமாகத் திகழ்ந்தவர் தலைவர் பாலா என்பது வரலாறு கூறும் உண்மையாகும்.

                     பாலா என்றால் தமிழ்!

                     பாலா என்றால் பண்பாடு!

                     பாலா என்றால் மொழி!

                     பாலா என்றால் கட்டொழுங்கு!

                     பாலா என்றால் சிறந்த நிர்வாகி!

                     பாலா என்றால் வெளிப்படை!

                     பாலா என்றால் அறிவு!

                     பாலா என்றால் திறமை!

                     பாலா என்றால் அறிவாற்றல்!

                     பாலா என்றால் மனத் துணிவு!

                     பாலா என்றால் புன்சிரிப்பு!

                     பாலா என்றால் தன்னம்பிக்கை!

                     பாலா என்றால் வீரம்!

                     பாலா என்றால் துணிவு!

கு.தேவேந்திரன்

உதவி ஆசிரியர், 'மக்கள் ஓசை'

என் நினைவுகளில் இரா.பாலகிருஷ்ணன்

1962ஆம் ஆண்டு தலைநகரில் நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோது அப்போதைய வானொலித் தலைவரை அறிமுகம் செய்து வைத்தார் எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு (ரெ.கா). ரெ.கா. மலேசிய வானொலி இந்தியப் பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது. அண்றைய தினம், சிங்கப்பூர் வானொலியில் ஒலியேறிய என்னுடைய 'விடிந்தது' எனும் நாடகத்தைச் செவிமடுத்ததாகக் குறிப்பிட்ட இரா.பாலகிருஷ்ணன், மலேசிய வானொலியில் தொடர் நாடகங்களை அறிமுகம் செய்யும் திட்டம் இருப்பதாகச் சொன்னார். தொடர் நாடகம் எழுதுமாறும் என்னைக் கேட்டுக் கொண்டார்.

இளம் எழுத்தாளனான என்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கை என்னை நெகிழ வைத்தது. மகிழ்வுடன் தொடர் நாடகம் எழுத ஒப்புக்கொண்டு, 'ஆசைக் கனவு' என்ற தலைப்பில் 13 வார தொடராக எழுதிக் கொடுத்தேன். சிங்கப்பூர் எழுத்தாளர் இரசுவப்பாவின் 'அன்பேஅமுதா'தான் முதலில் ஒலயேறியது. அதனை அடுத்து என்னுடைய 'ஆசைக்கனவு.'

அந்த வகையில் மலேசிய வானொலிக்கு நான் முதலில் எழுதியதே தொடர் நாடகம்தான். அதன் பின்னர், பல நாடகங்கள் எழுதினேன். என் நாடகத்தைத் தொடர்ந்து செவிமடுத்து வந்த இரா.பாலகிருஷ்ணன், வானொலியில் சில ஆண்டுகள் நான் பணிபுரியவும் ஏற்பாடு செய்தார்.

ப. சந்திரகாந்தம்

ஆசிரியர், 'தமிழ் நேசன்'

பேங்க் பூரோ பங்குகளை வாங்க கூட்டுறவுக் கழகத்தைத் திரட்டியவர்

மலாயாப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களில் சமூகப்பற்றுள்ளவர்கள் குழாமில் இரா.பாலகிருஷ்ணன். 1967ஆம் ஆண்டு மலேசிய இந்தியர் உபகாரச்சம்பள வாரியம் என்ற அமைப்பை டாக்டர் இராமசுப்பையா தலைமையில் நிறுவியபோது அதில் நானும் இடம் பெற்றிருந்தேன். இரா.பாலகிருஷ்ணன் அவர்களுடன் அப்போது ஏற்பட்ட தொடர்பு அவரது இறுதி மூச்சு வரை தொடர்ந்தது.

1969ஆம் ஆண்டு டாக்டர் இராமசுப்பையா காலமடைய, உபகாரச்சம்பள நிதியின் பெயர் டாக்டர் இராமசுப்பையா உபகாரச்சம்பள வாரியமாக மாற்றப்பட்டது. அந்த வாரியத்திற்கு இரா.பாலகிருஷ்ணன் தலைவராகப் பொறுப்பேற்றார். நிதியைப் பெருக்குவதற்குப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். துணையமைச்சர்களாக இருந்த டத்தோ சுப்ரா, டத்தோ பத்மா ஆகியோரின் உதவியோடும் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்களின் ஆதரவோடும்  பல நிகழ்ச்சிகளை நடத்தினார். தமிழகத்திலிருந்து தரமான கலைஞர்களை வரவழைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

மலேசியத் தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் தலைவராக இருந்த சா.ஆ.அன்பானந்தன், இளைஞர்களுக்காக ஒரு கூட்டுறவுக்கழகத்தைத் தோற்றுவிக்க விரும்பினார்.  அதன் தலைவராக இரா.பாலகிருஷ்ணன் பொறுப்பேற்க வேண்டும் என விரும்பினார். சா.ஆ.அன்பானந்தனுடன் நானும் பாலாவைச் சந்திக்கப் போனேன். மாஜூ ஜெயாவில் செயலாளராகவும், துணைத்தலைவராகவும் இருந்தபோது எங்கள் நட்பு இன்னும் நெருக்கமானது.

பேங்க் பூரோவை வாங்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது, இந்தியர்களின் சொத்தாக விளங்கும் நான்கு கூட்டுறவுக் கழகங்களையும் இணைத்துப் பெரும் பங்குகளை வாங்குவதற்கு வழி ஏற்படுத்தியவர் இரா.பாலகிருஷ்ணன்.

நாட்டின் எல்லா நிலை மனிதர்களோடும் மரியாதை பெற்றிருந்தார். எல்லா நிலை மனிதர்களுக்கும் சமமான மரியாதையைக் கொடுக்கும் மனிதராகவும் வாழ்ந்தார். அமைச்சராக- தூதுவராக இருந்தாலும், காரோட்டியாக இருந்தாலும் பேதம் பார்க்கமாட்டார்.

தன்னுடைய முதல் தமிழாசிரியர் பி.எஸ். கோவிந்தனுக்கு இரா.பாலகிருஷ்ணன் கொடுத்த மரியாதை அவரது குருபக்திக்கும் பண்புக்கும் சான்றாக விளங்கியது.

வாழ்க்கையிலே எத்தனையோ நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். எத்தனையோ பேரிடம் பழகி இருக்கிறேன். ஆனால் பாலாவைப் போல் இன்னொரு நண்பரை வாழ்க்கையில் பெறமுடியாது.

நா.கோவிந்தன்

தமிழ் வாழ்ந்த காலம்

காலன் கடத்திச் சென்ற

தமிழ்த்தாயின் கலைமகனே..!

வாழ்ந்தது போதுமென

சாதாரணமாய்

போய்விட்டாய்!

அணைந்ததே

எங்கள் தீபமென

சதா ரணமாய் இருளில் நாங்கள்....

தமிழ் உச்சரிப்பில் வழுவாமை

இலக்கணத்தில் பிழையின்மை

இதுவே வானொலியில்

தமிழ் வாழ்ந்த காலம்

'பாலாவின் பொற்காலம்'

அன்பிலும் பண்பிலும்

சொல்லிலும் செயலிலும்

தமிழ் மணக்கச் செய்த

அண்ணலே!

தமிழ் கண்ணலே!

ஒரே ஒரு முறை வந்து

சொல்லிவிட்டு போ!

நீ எங்கு இருக்கிறாய்???

ஜமுனா வேலாயுதம்

எங்கள் வழிகாட்டியை இழந்துவிட்டோம்

நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் என்பார்கள். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு மருமகளாக ஒரு மாணவியைப் போல் வந்தேன். என்னுடைய கணவருக்குதந்தான் திரு.இரா.பாலகிருஷ்ணன் அண்ணன்.

ஆனால் எனக்கும் ஓர் அண்ணனைப் போலவே இருந்தார். குடும்பத்தைப் பாசப் பிணைப்போடு கொண்டு செல்லவேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருந்தார். அவரிடம் கேட்காமல் கருத்துப் பரிமாற்றம் செய்யாமல் யாரும் எதையும் செய்யமாட்டோம்.

எங்கள் வழிகாட்டியை இழந்துவிட்டோம்.

டாக்டர் ஜானகி பத்மநாபன்

பாலாவின் தம்பி மனைவி

நம் நினைவில் நிழலாடுபவர்

நம் அனைவரது நினைவில் நிழலாடும் அன்பர் பாலா அவர்கள் நறுக்கென்று பேசுபவர். மற்றவர் என்ன நினைப்பர் என்பது அவருக்கு என்றுமே ஒரு பொருட்டல்ல. முகத்துக்கு நேரே ஒளிவு மறைவின்றி ஆணித்தரமாகப் பேசுபவர்.

இவர் யார் தெரியுமா? அவர் யார் தெரியுமா? என ஆங்கிலத்திலும் தமிழிலும் உடன் இருப்பவர்களை அறிமுகம் செய்வது அவருக்கே உரிய தனி பாணி. நோயின்றி வாழ்ந்தவர்- அது நாம் கண்டது. வறுமை என்னவென்று அறியாதவர் - அது அவர் சொன்னது. நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டார்.

வெ.ஆறுமுகம்

முன்னாள் ஆர்.டி.எம்.ஒலிபரப்பாளர்

பாலா இல்லாத வீட்டில் சோகம்

என் தம்பி எங்களுக்கு எல்லாமுமாக இருந்தார். தம்பி வீட்டிற்குப் போவது என்றால் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கும். தம்பி இல்லாத இந்த வீடு சோகமாக இருக்கிறது. வாழ்க்கையில் இப்படியொரு தம்பியை இனி பார்க்க முடியுமா? தம்பியின் நினைவு வந்தாலே துக்கம் தொண்டையை அடைக்கிறது.

ராதா

பாலாவின் மூத்த சகோதரி

பாலா ஒரு பூந்தோட்டம்

எல்லோராலும் அன்பாக பாலா என்றழைக்கப்பட்ட அந்த அளவுக்கு அவரின் பெயரும் புகழும் வியாபித்திருக்கிறது. அது ஒரு பூந்தோட்டம், என்றும் மணம் வீசிக் கொண்டிருக்கும்.

இந்தியாவிலிருந்து 1937இல் எனது பெற்றோருடன் தெலுக் இந்தான் பகுதியில் உள்ள ரூபனா தோட்டம் இரண்டாம் பிரிவில் வந்து சேர்ந்தேன். இந்தத் தோட்டம் மிகவும் உட்பகுதியில் இருக்கிறது. அத்தோட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஜி.ஆர். (திரு.இராமானுஜம்)  அத்தோட்டத்தில் தலைமை குமஸ்தாவாக (கிராணியார்)  இருந்தார். அலரின் இரண்டாம் குழந்தைதான் இரா.பாலகிருஷ்ணன். அப்போது அவர் சுமார் 7 மாத கைக்குழந்தை. அப்போது எனக்கு 91/2 வயது இருக்கும்.

தெலுங்கு மொழி பேசிபவன் என்ற முறையில் அக்குடும்பத்துடன் உரையாட முடிந்தது. அவர்களும் என்னை அன்புடன் அரவணைத்தனர். மாலை வேளைகளில் பாலாவைத் தூக்கிக் கொண்டு உலா போவேன். வேடிக்கை விளையாட்டு காட்டுவேன்.

ஜப்பானியர் காலத்திற்குப் பிறகு தமிழாசிரியர் நிலைக்கு வந்துவிட்டேன். அக்காலக் கட்டத்தில்தான் பாலாவுக்குத் தமிழ் போதிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அவர் படிப்பில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவராகத் திகழ்ந்தார். தோட்டத்தில் அவருக்கு நிறை நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எல்லோரும் தொழிலாளர்களின் குழந்தைகள். ஏற்றத்தாழ்வின்றி எல்லோருடனும் அன்பாகப் பழகுவார். பிறகு தெலுக் இந்தான் ஏ.சி.எஸ். பள்ளியிலும் ஈப்போ ஏ.சி.எஸ் பள்ளியிலும் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது விடுமுறையில் அவரின் நெருங்கிய நண்பர் டத்தோ கு.பத்மநாபனுடன் ரூபானா தோட்டத்திற்கு அடிக்கடி வருவார். அவர் என்னையும் சந்திக்கத் தவறமாட்டார்.

பால்ய நண்பர்கள் அப்போது தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்தார்கள். அவர்களைத் தேடிச் சென்று நலம் விசாரிப்பதோடு பத்மநாபனையும் அறிமுகப்படுத்தி வைப்பார். அதில் பழைய நட்பு, அன்பு, பாசம் நிறைந்திருக்கும். அதில் முக்கியமானவர் துரை.மாணிக்கம். அவ்விருவரின் அந்த நட்பின் ஆழத்தை சொல்லிவிட முடியாது.

பட்டப் படிப்பை முதல் நிலையில் (தமிழில் சிறப்புத் தேர்ச்சி) முடித்து வானொலியில் உயர் பதவி வகித்த போதும் பழைய நட்பை மறவாமல் பால்ய நண்பர்களுக்கு மரியாதை நிறைந்த அன்பைக் காட்டுவதில் பாலாவுக்கு நிகர் பாலாதான்.

குழந்தையாக, மாணவராக, நண்பராக, உறவினராக, பட்டதாரியாக, உயர்நிலை உத்தியோகஸ்தராக, எல்லோருக்கும் எல்லாக் காலங்களிலும் உதவும் பண்பாளராக பாலாவைப் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்த காலங்கள் உண்டு.

பாலாவின் சகோதர சகோதரிகள், குடும்பத்தார் என்னை 'அண்ணன்' என்றே அழைப்பார்கள். ஆனால் பாலா மட்டும் 'சார்' என்று கூப்பிடுவார்.

நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் பலமுறை பாலாவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததுண்டு. அப்போது அங்கு வரும் நண்பர்களிடம் என்னை அறிமுகப்படுத்துவதோடு, இவர் 'என் முதல் தமிழ் வாத்தியார்' என்று சொல்லி மகிழ்வார். எனக்கும் அதில் அதிக சந்தோஷமே.

பாலாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.

பி.எஸ் கோவிந்தன், ஈப்போ

பாலாவின் முதல் தமிழ் ஆசிரியர்

சின்ன வயது பண்பு

படிக்கும்போதுகூட இத்தனை மணிக்கு வருவேன் என்று சொன்னால் சரியாக வருவார். தோட்டத்தில் இருந்தபோது, நண்பர்களுடன் வீட்டிற்கு வருவார். எல்லாருக்கும் தேநீரும் பலகாரமும் கொண்டு வரச்சொல்வார். திடீரென்று அழைத்து வந்தால் எப்படிக் கொடுக்க முடியும்? நண்பர்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையேல் நண்பர்களை அழைத்துக்கொண்டு போய்விடுவார்.

சின்ன வயதில் இருந்த அந்தப் பழக்கம் கடைசி மூச்சுவரை அவரிடம் இருந்தது. இப்படிப்பட்ட ஓர் அண்ணன் கிடைத்ததற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

இந்திரவதி

(பாலாவின் தங்கை)

நினைவில் வைத்துப் போற்றுகின்றோம்

பாலா என்று அனைவராலும் உரிமையுடன் அழைக்கப்பெற்ற அமரர் இரா. பாலகிருஷ்ணன் மலேசிய வானொலி இந்தியப் பகுதியின் தலைவராக இருந்து தமிழ்ப்பணி செய்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அன்னாரின் கல்விப் பணிகளை அவ்வளவு எளிதில் மறந்துவிடமுடியாது.  1970ஆம் ஆண்டுகளில் டாக்டர் இராம சுப்பையா அறவாரியத்தைத் தொடங்கி, பல மாணவர்களுக்குக் கல்வி உபகாரச் சம்பளம் கிடைப்பதற்கு வழி அமைத்துத் தந்தவர் ஆவார். அந்தக் காலக் கட்டத்தில் PTPTN, MIED போன்ற கல்விக் கடனுதவிகள் இல்லாத நிலையில் பல ஏழை மாணவர்களுக்கு டாக்டர் இராம சுப்பையா கல்வி அறவாரியம் உதவிகள் செய்தது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்றாக 1975ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் படிவத்தில் சிறப்புத் தேர்ச்சி பெறாத 15 மாணவர்களுக்கு தங்கும் வசதியுடன் சிறப்பு வகுப்புகள் நடத்தி அதன் மூலம் அவர்கள் ஆறாம் படிவத்தில் தேர்வு பெற்று பல்கலைக்கழகம் செல்ல வழி அமைத்துத் தந்தவர்.  மேலும் EWRF என்றழைக்கப்படும் கல்வி, சமூக நல ஆய்வு அறவாரியத்தின் அறங்காவலராக இருந்து பலதரப்பட்ட உதவிகள் வழங்கியுள்ளார். தேவைப்படும் நேரங்களில் பயன்மிக்க ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

அன்னாரின் கல்விப் பணிகளைப் போற்றி நினைவு கொள்ளும் வகையில் 'Bala Research Scholarship' எனப்படும் பாலா ஆய்வு உபகாரச் சம்பளம் என்னும் திட்டமொன்றினை விரைவில் தொடங்க எண்ணம் கொண்டுள்ளோம். அன்னாரின் கல்விப் பணிகள் தொடர்ந்து நினைவில் போற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் முக்கிய நோக்கமாகும்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவரோடும் இணைந்து நாங்களும் துயர் பகிர்கின்றோம். அன்னாரின் ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றோம்.

சி. பசுபதி

தலைவர், கல்வி, சமூக நல ஆய்வு அறவாரியம்

இளமைக்கு எழபத்து இரண்டு

ஒலிபரப்புத் துறையிலொரு பல்கலை! - நாட்டோர்

  உளம்மகிழ்ந்த வானொலிக்கோர் முத்திரை! - தூய

மொழிபரப்பும் முறைதேர்ந்த தலைவராய் - பாலா

  முனைந்து பெற்ற வெற்றியென்றும் நிரந்தரம்!

இளமைக்கே எழுபத்திரண் டகைவையாம்! - பாலா

  இன்றமிழாம்! அவர்க்கேது முதுமையாம்? - தமிழின்

வளமைக்குமே பணிசெய்த முதல்வராம்! - நாட்டின்

  வரலாற்றில் பொற்காலப் புதல்வராம்!

தமிழிருக்கும் இடம்தேடி அலைந்தவர்! - படைக்கும்

  தக்காரை இனம்கண்டு தெளிந்தவர்! - அன்னார்

தமிழ்ப்பிரிவைத் தேனொலியாய் அளித்தவர்! - மேன்மை

  தமிழ்ச்சிறப்பை பாமரர்க்கும் தெளித்தவர்!

தாளமிடும் கொள்கையிலாத் தன்மையர்! - நட்பைத்

  தலைவணங்கி அரவணைக்கும் கேண்மையர்! - ஆற்றல்

கோலமிடும் இளையவரை வளர்த்தவர்! - அன்னார்

  குறிதவறா உயர்வுகண்டு திளைத்தவர்!

திகைத்தவர்க்குத் திசைகாட்டும் கலங்கரை! - பாலா

  திக்கெட்டும் முரசுகொட்டும் புகழ்நிலை! - தன்னைப்

பகைத்தவர்க்கும் அருள்கூட்டும் இயற்கையாய்! - பாலா

  பன்னூறு ஆண்டின்னும் வாழ்கவே!

கவிஞர் வீரமான்

பாலா சகாப்தம் விடைபெறுகிறது

"நீங்களும் வந்து எங்களுடன் இணைந்து மலாயா வானொலித் தமிழ் ஒலிபரப்புக்கு வலிமை சேர்க்கலாமே?"

1962இல் மலாயா வானொலித் தமிழ்ப் பகுதிக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு இதை ஒரு தாரக மந்திரமாக உச்சரித்துவந்த இரா. பாலகிருஷ்ணன் அவர்களின் இறுதிமூச்சு நேற்று நள்ளிரவுடன் விடைபெற்றுக் கொண்டது.

73ஆவது வயதில் நம்மைவிட்டுப் பிரிந்த "மக்கள் ஓசை"யின் இயக்குநர் வாரியத் தலைவர் பாலா என்று புகழ்பட அழைக்கப்பட்ட இரா. பாலகிருஷ்ணனின் வாழ்க்கைப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால், இன்றைய நான்காவது தலைமுறைக்கு ஒரு பாடப் புத்தகமாக வாழ்ந்த பெருமைக்குரியவராகவே அவர் காட்சி தருகிறார்.

மலாயா பல்கலைக்கழகப் பட்டதாரியான பாலா, ஒலிபரப்புத்துறையில் தேசிய ரீதியிலும் அனைத்துலகப் பாதைகளிலும் அவர் நடைபோட்ட பாதைகள், காலத்தால் அழியாத சுவடுகளையே பதிவு செய்து வந்தன. அந்தப் பயணங்களில் பாலாவின் பெருமைகள், பண்புகள், மன உறுதி, நட்புணர்வு, திறமைக்குத் தரப்பட்ட மதிப்பு, திறன் கொண்டோர்க்கு வழங்கிய அங்கீகாரம், பார்த்துவந்த பணிகளை முடித்துக் காட்டிய சீர்மை, கொள்கைப் பிடிப்பு போன்ற பதிவுகள் தனிச்சிறப்பைச் சுமந்து நிற்கின்றன.

"என்னைப்பற்றி இழிவாக, மதிப்புக் குறைவாக மற்றவர்கள் பேசும் நிலையை என் வாழ்க்கையில் நான் அமைத்துக் கொண்டதில்லை" என்று தனது பண்புக்கு ஒரு தடவை தானே சான்று கொடுத்தவர் பாலா. இத்தகைய சான்றைக் கொடுப்பதற்கு எல்லோருக்கும் சாமானியமாகத் துணிவு வந்துவிடாது. அதற்குத் தகுதியும் வேண்டும்.

"தமிழ் இருக்கும் இடம் தேடி அலைந்தவர்; திகைத்தவர்க்குத் திசை காட்டும் கலங்கரை" என்று நம் நாட்டுக் கவிஞர்களின் புகழ்மாலையைச் சுமந்தவர் பாலா.

பாலாவின் வானொலிப் பணிக்காலம், தேனொலி பாய்ந்த பொற்காலம் என்பதை வரலாறு கூறும்.

ஆசிய ஒலிபரப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்று கடமை தவறாமல் பொறுப்புணர்வோடு தனது பணிகளை நிறைவேற்றிக் காட்டி ஐ.நா. உலக நிறுவனத்துக்குப் புகழ் தேடித் தந்த பெருமையும் பாலாவுக்கு உண்டு. ஐ.நா. அமைப்பின் ஓர் அங்கமாக இருந்த ஆசிய ஒலிபரப்பு மேம்பாட்டுக் கழகத்தின் சேவைகள் வழி பல நாடுகளின் ஒலிபரப்பாளர்களது மேன்மைக்கு ஏணியாகவும் தோணியாகவும் இருந்தவர் பாலா.

உலக உருண்டையில் சுழன்று கொண்டிருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், பெல்ஜியம், சுவிடன், பின்லாந்து, சுவிட்சர்லாந்து, இத்தாலி, வத்திக்கன், கென்யா, ருமேனியா, ஸ்காட்லாந்து, சவூதி அரேபியா, ஜப்பான், புருனை, கொரியா, தைவான், சீனா, ஹாங்காங், பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், வியன்னா, லாவோஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்காளதேசம், ஸ்ரீலங்கா, மாலத் தீவு, பாகிஸ்தான், பாப்புவா நியூ கினி, நேப்பாளம், நியூசிலாந்து போன்ற நாடுகளின் ஒலிபரப்புகளது அலை வரிசைகளுக்காக இரா. பாலகிருஷ்ணன் தந்த ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் அவரைப் புகழ் வரிசையில் முதல் நிலையில் வைத்துப் பெருமை சேர்த்தன. 

சட்டையில் கறைபட்டிருந்தால் சத்தம் போட்டு இரைச்சலிட்டுக் கொண்டிருக்கிற சமுதாயத்தில் இரா. பாலகிருஷ்ணனின் கண்ணோட்டம் வித்தியாசமான பார்வையைப் பதிவு செய்தது.த்தனது வானொலிப் பணிக்காலத்தில், வானொலிப் பெட்டிகளைத் தங்கள் தலைமாட்டில் வைத்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு ஜனரஞ்சகமான நிகழ்ச்சிகளை விதவிதமான சட்டைகளாகத் தைத்துக் கொடுத்துக் காட்டும் ஒரு கலையைப் பின்பற்றினார். அதன்வழி புத்தம் புது ஒலிபரப்பாளர் பரம்பரை ஒன்றை மக்களுக்கு அறிமுகம் செய்து மதிப்பையும் மரியாதையையும் சம்பாதித்தப் பெருமை பாலாவுக்கு உண்டு. 

இரண்டு பர்லாங்கிற்கு ஒரு முன் வேலியைப் போடுகிற சமுதாயத்தின் பார்வையில் கண்ணுக்கு எட்டிய தூரம் வேலியே இல்லாத ஒரு பாதைக்கு இளையதலைமுறையை அழைத்துச் செல்வதற்குத் தலைமை ஏற்ற ஒரு சமுதாய நற்பணித் தளபதி பாலாவை இப்போது இழந்து நிற்கிறோம்.

பாலாவின் பண்பும் நேர்மையும் நமது சமுதாயத்தின் இளைய தலைமுறையின் உயர்கல்விக் கண்களுக்கு ஒளி கொடுக்கும் திசையை நோக்கி அழைத்துச் செல்லத் தயங்கியதில்லை. இராம சுப்பையா கல்விநிதி அறவாரியத்தின் கல்விப் பணிகளுக்குக் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்து கண்ணியம் நிறைந்த பணிகளைத் தந்தவர் பாலா. அவர் பெரிதும் மதித்த இயல், இசை, நாடகத் துறைகளில் புகழ் நிறைந்தவர்களை மலேசியாவுக்கு அழைத்து, அறிமுகப்படுத்தி அந்த வாரியத்திற்கு வலிமை சேர்த்தவர் பாலா.

தனது 25ஆவது வயதில் கணினி உலகில் கால் பதித்து தனது ஆற்றலை இணையத்தின்வழி உலகத்துடன் இணைத்தவர் பில்கேட்ஸ் என்று பெருமைப்படும் உலகுக்கு, எங்கள் பாலா தனது 25ஆவது வயதில் வானொலி ஒலிபரப்புத் துறையில் உலகத் தரத்துக்கு உலகளாவிய சேவைகளால் தன்னைப் பிணைத்துக் கொண்ட பில்கேட்ஸ் என்றே எண்ணிப் பெருமைப்பட வைத்திருக்கிறார்.

தெலுக் இந்தான் ரூபானா தோட்டத்தில் பிறந்தவர் என்பது பாலாவுக்குக் கிடைத்த தொடக்க்கால முகவரியாக இருக்கலாம். ஆனால், உலகளாவிய நிலையில் தனது பண்பாலும் பணிகளாலும் தன் வாழ்க்கைப் பயணத்தில் பல நூறு பேர்களுக்கு அவர் முகவரி கொடுத்தவர் என்பதை இத்தருணத்தில் எண்ணி அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.

இரா. பாலகிருஷ்ணனுக்கு வளையத் தெரியாது. நெளியத் தெரியாது. அதன் காரணமாகவே அரசியலின் பக்கம் எட்டிப் பார்க்க விரும்பவில்லை.

"ஜனநாயகத்தில் ஏமாளிகளும் கோமாளிகளும் யோக்கியதை இல்லாதவர்களும் மூடர்களும் பதவியைப் பிடிக்கும் அரசியலைப்பற்றியே சிந்திப்பவர்களாக இருப்பதால் எனக்கு அரசியல் பிடிக்காமல் போனது" என்று கூறியவர் பாலா. அரசியலுக்கு அப்பால் நின்று நல்ல பணிகள் செய்வதில் வெற்றிக் கொடியை ஏற்றியவர் பாலா என்று இத்தருணத்தில் அவரை நினைந்து பெருமைப்படுவோம்.

நம் நாட்டின் மூன்று பிரதமர்கள் (துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக், துன் ஹுசேன் ஓன்) பார்வையில் நம் தேசத்துக்கு மிகக் கண்ணியம் நிறைந்த சேவைகளைத் தந்த செயல்வீரர் இரா. பாலகிருஷ்ணன் மறைந்தாலும், நம்மை, அவரிடமிருந்து பிரித்துவிட முடியாது. அவரது நினைவில் நமது பயணத்தை அவருடன் என்றும் இணைத்தே வைத்து அஞ்சலி செய்வோம்.

உழைப்பின் குன்றம்... நட்பின் சிகரம்... என் கடன் பணி செய்வதே என்று வாழ்ந்த இரா. பாலகிருஷ்ணன் என்ற சகாப்தம் விடைபெறுகிறது! அவரது ஆன்மா என்றென்றும் எங்கெங்கும் சாந்தி ஒளியைப் பரப்பட்டும் என்று இறைஞ்சுவோம்.

எம். துரைராஜ்

செய்தி விரிவாக்க ஆசிரியர்

'மக்கள் ஓசை' (26.5.2009 அன்று வெளியான தலையங்கம்)

எனக்கு அவர் ஒரு நியாயத்தராசு

1980களில் 'தமிழ் ஒசை' நாளிதழ் தொடங்கப்பட்ட பிறகே திருமிகு பாலா அவர்களைப் பார்க்கவும் தெரிந்து கொள்ளவும் எனக்கு வாய்ப்பு ஏற்பட்டது.

அப்போதெல்லாம் வானொலியில் வானொலியில் நல்ல தமிழ் தாராளமாகப் புழங்கும். நல்ல தமிழ் கற்றுத் தரும் - ஏன் தமிழ் மொழிகாக்கும் ஒரு மொழி நிறுவனம் போன்று வானொலியின் இந்தியப் பிரிவு விளங்கியது. அதறகுக் காரணமாக இருந்தவர் திருமிகு பாலா அவர்கள் என்று அறிந்தபோது, இநுத மனிதர் நம் சமுதாய, அரசியல் தலைவராக இல்லையே என்று மனம் ஏங்கும்.

தமிழ் நாளிதழ்களைத் தொடரும் சாபம் அதன் நிர்வாகிகள். நான் பணியாற்றிய 'தமிழ் மலர்', 'தமிழ் ஓசை' பத்திரிகைகளில் நிர்வாகப் பூச்சாண்டிகளை நிறையப் பார்த்திருக்கிறேன். 'தமிழ் ஓசை'யில் ஆதி.குமணன் முக்கியமானவராகவும் ஆசிரியராகவும் இருந்தாலும், நிர்வாகச் சிந்து விளையாடல்களை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. அதற்கான பலம் அன்று ஆதி.குமணனிடம் இல்லை.

தொழிலாளர் பிரச்சினைகள் எழுந்தன. பெரும்பாலான ஊழியர்கள் ஓரணியில் இருந்தோம். இத்தகைய நெருக்கடிகளில் தீர்வு காண்பதற்காக 'தமிழ் ஓசை'யின் பங்குதாரர்களில் ஒருவர் என்ற முறையில் திருமிகு பாலா அவர்களைச் சந்திக்க திரு.தமிழ்மணி அவர்களும் திரு.துரைராஜ் அவர்களும் எங்கள் குழுவை அழைத்துச் சென்றனர். அன்றுதான் திருமிகு பாலா அவர்களை முதன் முதலாக - நேரில் சந்தித்தேன்.

பிரிக்பீல்ட்சில் ஒரு நிறுவனத்துக்கு அவர் அவ்வப்போது வருவார். வேறு அலுவலாக நான் அந்த நிறுவனத்துக்குச் செல்லும்போது திருமிகு பாலா அவர்கள் பெரிய காரில் வந்து இறங்குவதைப் பார்த்திருக்கிறேன். பொன்னிற மேனி - உயரமான வாகு- ராஜகம்பீரமான நடை. கருப்புக் கண்ணாடி அணிந்திருப்பார். சில சமயம் அவரைப் பார்க்கும்போது தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நினைவு வரும்.

'தமிழ் ஓசை' பத்திரிகை தொடங்கப்பட்டபோது, ஆதி.குமணன் வெற்றிகரமான பத்திரிகையாளர் என்று நிரூபிக்கப்பட்டிருந்தாலும் பண பலம் இல்லாத சாதாரண நிலையில் இருந்தார். ஆதி.குமணனும் அந்த நிறுவனத்தில் பங்குதாரராக வேண்டும் என்று கூறியவர் திருமிகு பாலா அவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

'மக்கள் ஓசை' வாரியத் தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி அவரைச் சந்திக்கவும் பேசவும் பழகவும் வாய்ப்புக் கிடைத்தது. அவரோடு இருக்கும்போது இன்றைக்கும் ஒரு மாணவனைப் போலவே உணர்வேன்.

ஒரு நல்ல மனிதரின் அருகில்  இருக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்ற நினைவு எனக்குள் இருக்கும். என்னிடம் கனிவோடும் நம்பிக்கையோடும் பேசுவார். அவரோடு எனக்கு அதிக நெருக்கம் என்று சொல்ல முடியாது. ஆனால், அவரோடு இருக்கும்போது உண்மையான உலகத்தில் இருப்பதுபோல உணர்வேன். எனக்கு அவர் ஒரு நியாயத் தராசு.

ஆதி.இராஜகுமாரன், இயக்குநர், 'மக்கள் ஓசை' வாரியம்

ஆசிரியர் 'நயனம்'