'ரேடியோ பாலா'

(அமரர் திரு. இரா. பாலகிருஷ்ணன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்)

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒலிபரப்புத்துறைக்கும் அதில் தமிழ் மொழியின் மறுமலர்ச்சிக்கும் அளப்பரிய பங்கினை ஆற்றியவர் இரா.பாலகிருஷ்ணன். அதன் காரணமாகவே அவர் 'ரேடியோ பாலா' என்று செல்லமாக அழைக்கப்பட்டார்.

பாலகிருஷ்ணன், இராமானுஜம் - கிருஷ்ணம்மா தம்பதிகளுக்கு மகனாக 1936ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாளன்று தெலுக் ஆன்சன் ருபானா தோட்டத்தில் பிறந்தார். அவரின் தந்தை அத்தோட்டத்தில் கண்டக்டராக இருந்தார். அத்தம்பதிகளுக்கு ஏழு பிள்ளைகள். ஆண்மக்கள் நால்வர் - பாலகிருஷ்ணன், பத்மநாபன், ஹரிராமுலு, சாம்பசிவம். பெண்மக்கள் மூவர் - ராதா, இந்திரவதி, புஷ்பலீலா.

கல்விப் பருவம்

பாலா பள்ளி செல்லும் பருவம் அடைந்தபோது நாடு ஜப்பானியர் படையெடுப்புக்கு இலக்காகியிருந்தது. அத்தோட்டத்துத் தமிழ்ப்பள்ளியில் அவர் கல்வி வாழ்க்கை தொடங்கியது. பின்னர், சிரம்பானில், அங்கிருந்த அவரது மாமாவின் உதவியில் அது தொடர்ந்தது. அங்கு ஆங்கிலம், தமிழ் என இரண்டையும் கற்கத் தொடங்கினார். காலையில் ஏசிஎஸ் பள்ளியில் ஆங்கிலம்; பகலில் விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் தமிழ். பாலாவின் மாமா தெலுக் ஆன்சனுக்கு மாற்றலாகிச் செல்லவே, அவரைப் பின்பற்றிப் பாலாவும் சென்றார். அங்கிருந்த ஏசிஎஸ்ஸிலும் பாரதமாதா பள்ளியிலும் அவரது கல்வி தொடர்ந்தது. அங்குப்  பள்ளி வாழ்க்கை  அவ்வளவு சுகமானதாக இல்லை. தெலுக் ஆன்சனில் அவரது பள்ளி கிந்தா ஆற்றுக்கு அப்பால் இருந்தது. அதிகாலை எழுவார். சைக்களில் கிந்தா ஆறுவரை சென்று, அங்குப் படகிலேறி ஆற்றைக் கடப்பார். ஆற்றைக் கடந்ததும் படகுத்துறையிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளிவரை மறுபடியும் சைக்கிளை மிதிப்பார். விளையாட்டுகளில், குறிப்பாக கால்பந்தாட்டத்தில்,  அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. படிப்பையும் அதன்பின் புறப்பாட நடவடிக்கைகளையும் முடித்துக்கொண்டு  வீடு திரும்பும்போது மிகவும் களைத்துப் போய்விடுவார்.

உயர்இடைநிலைப் பள்ளிக்குச் சென்றபோது பாலா அவரது ஆசிரியர் திரு. ஸ்டான்லி பத்மனுடன் தங்கியிருக்க முடிவு செய்தார். அது ஒரு நல்ல முடிவாக அமைந்தது. திரு.பத்மன் நல்ல பாதுகாவலராகவும் வழிகாட்டியாகவும் விளங்கினார். பிடிவாதம் நிறைந்த பிள்ளையாக இருந்த பாலா, அவரைப் பார்த்து தன் போக்கை மாற்றிக்கொண்டார். பத்மனுடன் இருந்த காலம் பாலாவின் வாழ்க்கையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்திய காலமாகும். அதன்பின்னர், அவர் படிப்பதாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும் அதில் மிகுந்த சிரத்தையுடன் ஈடுபட்டார். பள்ளியில் தலைமை prefect ஆக இருந்தார். பேச்சுப் போட்டி, நாடகம், இலக்கியம் போன்ற நடவடிக்கைகளிலும் தீவிர ஈடுபாடு காட்டினார். அதே நேரத்தில் கால்பந்து, ஹாக்கி போன்ற விளையாட்டுகளிலும் கலந்து கொள்வார். கால்பந்து போட்டிகளில் சிறப்பாக ஆடிய அவரைப் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும் வந்ததுண்டு.

பல்கலைக்கழகத்தில் பாலா

ஈப்போ ஏசிஎஸ்ஸில் ஆறாம் படிவத்தை முடித்துக்கொண்ட பாலா, அங்கிருந்து பல்கலைக்கழகம் சென்றார். அவரது தோட்டத்தைச் சேர்ந்த ஒருவர் பல்கலைக்கழகம் சென்றது அதுவே முதல்முறையாகும். 1956இல் சிங்கப்பூரிலிருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தில் அவர் சேர்ந்தார். பல்கலைக்கழகத்தில் அவருக்குப் பல நண்பர்கள். அந்த நண்பர்கள் வட்டம் இன்றும்கூட அவரை ராக்கபெல்லர் (Rockefeller) என்றுதான் நினைவுகூறுகின்றனர். தாராள குணம் படைத்தவர், இரக்கம் நிறைந்தவர், பரிவு காட்டுபவர் என்பதனால் அவர்கள் கொடுத்த செல்லப் பெயர் அது. பல்கலைக்கழகத்தில் படிப்புடன் விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கினார் பாலா. சிங்கப்பூர் பல்கலைக்கழகம் ஹாங்காங் குழு ஒன்றுடன் ஆடிய கால்பந்தாட்டத்தில் பாலா கோல்காவலராக இருந்தார். அப்போது அவரது கோல் முனையிலிருந்து அவர் வேகமாக உதைத்த பந்து காற்றைப் பிளந்து கடிவேகத்துடன் பறந்து சென்று யாரும் எதிர்பாராத வண்ணம் எதிர்கோலுக்குள் புகுந்தது. அதுமுதல் அவர் 'கோலி பாலா' ஆனார். இந்திய ஆய்வியல் துறையில் கல்வி கற்ற அவர் 1960இல் (முதல் நிலை ஆனர்ஸ்) ஒரு பட்டதாரியாக வெளிவந்தார். 

வானொலியில் பாலா

1960-இல், தமது 24-ஆவது அகவையில், மலாயா வானொலியின் இந்தியப் பிரிவில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகச் சேர்ந்தார் பாலா. 1961-இல் இந்தியப் பிரிவின் தலைவரானார். தமது நெருங்கிய நண்பர் பத்மநாபனின் வற்புறுத்தலால்தான் இந்த வேலையில் சேர்ந்ததாக பாலா அடிக்கடிக் கூறுவதுண்டு.

வானொலியில் வேலை செய்துகொண்டே மலாயாப் பல்கலைக்கழகத்தில் 1961-இலிருந்து 1970 வரை பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.

வானொலியில் மறுமலர்ச்சி

வானொலியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் பாலா. வானொலியின் இந்தியப் பகுதியில் பல மாற்றங்களைச் செய்து அதற்குத் தனி மதிப்பையும் மரியாதையையும் கொண்டு வந்தார். அவரது காலத்தில் புதிது புதிதாக பல நிகழ்ச்சிகள் அறிமுகம் கண்டன. செய்திகள், விளையாட்டுச் செய்திகள், இலக்கிய நிகழ்ச்சிகள், இலக்கிய நாடகம், சமூக நாடகம், தொடர் நாடகம் எனப் பல்வகை நாடகங்கள், சிறுவர் நிகழ்ச்சி, மகளிர் நிகழ்ச்சி, இளைஞருக்கான நிகழ்ச்சிகள், அறிவியல் நிகழ்ச்சிகள், அறிவிப்பாளர் விருப்பம், சமுதாய பிச்சினைகள் மீதான கலந்துரையாடல்கள் எனப் பல்வகை நிகழ்ச்சிகளுடன் தமிழ் ஒலிபரப்பு விரிவு கண்டு பொலிவுபெற்று விளங்கியது. 'கலப்படம்' என்றொரு நிகழ்ச்சி உள்நாட்டுக் கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாகத் திகழ்ந்தது. இந்நிகழ்ச்சிவழி எண்ணற்ற கலைஞர்கள் அறிமுகமாகிப் பிரபலமடைந்திருக்கிறார்கள். 'கலப்படம்' புதிய பாடகர்கள் பெயரும் புகழும் பெற ஒரு களம் அமைத்துத் தந்த வேளையில், தேர்ந்த பாடகர்கள் தங்கள் பாடல்திறனை மேலும் வளப்படுத்திக் கொள்ள 'மெல்லிசைப் பாடல்கள்' போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. இந்நிகழ்ச்சியில் உள்நாட்டுக் கவிஞர்கள் எழுதும் பாடல்களுக்கு நிலையத்தின் இசைக் கலைஞர்கள் நாகசாமி பாகவதர், ரெ.சண்முகம், ந.மாரியப்பன் போன்றோர் இசை அமைக்க, உள்ளூர் பாடகர்கள் பாடுவார்கள்.

இது தவிர, 'இலக்கியப் பாடல்கள்' என்றொரு நிகழ்ச்சியும் இருந்தது. ழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் இசையுடனும் விளக்கத்துடனும்  ஒலியேறி வந்தன.  சிறந்த கலைஞர்களைக் கொண்டு ஒவ்வோர் ஆண்டும் படைக்கப்பட்ட 'வானொலி விழா'வை வானொலி ரசிகர்கள் இன்றும்கூட நினைவில் வைத்திருக்கிறார்கள். தரமான கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட தரமான நிகழ்ச்சி அது. மேடை நிகழ்ச்சியான அது மேடையில் நடத்தப்படும்போதே வானொலியிலும் நேரடியாக ஒலிபரப்பாகும். அதை நேரில் கண்டு ரசிக்க நேயர்கள் கூட்டம் அலைமோதும்.

தொலைபேசி உரையாடல் பாலாவின் காலத்தில் அறிமுகமானது. பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நிறைய ஒலிபரப்பப்பட்ட நேரத்தில் நாட்டு நடப்புக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்கத் தவறியதில்லை. அதற்கென்று  சில நிகழ்ச்சிகள் இருந்தன. 'கோடி வீடு,' 'நாட்டு நடப்பு,' 'என்ன சேதி,' 'உள்ளதைச் சொல்வோன்'  முதலியவை. அவற்றில் அன்றாட நடப்புகள் அனைவருக்கும் புரியும் வகையில் எளிய முறையில் எடுத்துச் சொல்லப்பட்டன.

கர்நாடக இசைப்பிரியர்களையும் அவர் மறந்துவிடவில்லை. இந்தியாவையும் இலங்கையையும் சேர்ந்த வித்வான்கள் மலேசியா வரும்போது அவர்களை வானொலிக்கு அழைத்து அவர்களின் இசைக்கச்சேரிகள் ஒலிப்பதிவு செய்யப்படும். பின்னர் ஒலிபரப்பப்படும்.

இவ்வளவு நிகழ்ச்சிகளின் ஒலிபரப்புக்கு வகை செய்த பாலா, தாமே நிகழ்ச்சித் தயாரிப்பில் ஈடுபட்டது உண்டா? உண்டு. வானொலியில் சேர்ந்த புதிதில் 'ஐ.நா.பேசுகிறது' என்ற நிகழ்ச்சியை அவர் தயாரித்து வழங்கியதுண்டு. 'நேயர் மன்றம்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நேயர்களின் கேள்விகளுக்கும் கருத்துகளுக்கும் அவர் பதிலளித்ததும் உண்டு. பின்னர் நிர்வாகப் பொறுப்புகள் கூடியதால் நிகழ்ச்சித் தயாரிப்பில் கலந்து கொள்வது நின்றுபோனது.

பாலாவின் காலத்தில் ஒலிபரப்பு நேரம் கூட்டப்பட்டது. இரவு ஒன்பது மணியுடன் முடிவடைந்த தமிழ் ஒலிபரப்பு இரவு 11 மணிவரை நீண்டதுடன், சிறப்பு நாள்களில் நள்ளிரவுவரையிலும்கூட இந்தியப் பகுதி ஒலிபரப்பியது. ஒலிபரப்பின் தரமும் உயர்ந்தது. அதற்கு முன்பு கேட்காத இடங்களில் எல்லாம் ஒலிபரப்பைக் கேட்க முடிந்தது. ஈப்போவிலும், ஜோகூர் பாருவிலும் புதிதாக இரண்டு வட்டார நிலையங்கள் செயல்படத் தொடங்கியது அவரது காலத்தில்தான். அதற்கு முன்பு பினாங்கு, மலாக்கா ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே வட்டார நிலையங்கள் இருந்தன (இப்போது ஒன்றுமில்லை!).

மொழியின் உச்சரிப்பிலும் அதன் பயன்பாட்டிலும் கண்டிப்பாக நடந்துகொள்வார் பாலா. அதில் ஐயப்பாடுகள் எழுமானால், தக்க அறிஞர்களிடம் தகுந்த விளக்கம் பெறவும் முனைப்புக் காட்டுவார், மொழியாளுமை, மொழியைச் செறிவாகப் பயன்படுத்தும் திறன் முதலிய பண்புகள் அவரது காலத்தில் மேலோங்கி நின்றன. அவரது காலத்துக்கு முன்பு வானொலியில் வடமொழிச் சொற்கள் தாராளமாக புழங்கி வந்தன. பாலா அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அவரது வருகைக்குப் பின்னர் 'நமஸ்காரம்' 'வணக்கம்' ஆனது. 'ஆரம்பம்' 'தொடக்கம்' ஆனது. 'மந்திரிகள்' 'அமைச்சர்கள்' ஆனார்கள். 'அபிப்பிராயம்' 'எண்ணம்/கருத்து' ஆனது. இப்படி எத்தனையோ. இயன்றவரை நல்ல தமிழ் புழங்கும் இடமாக வானொலியை அவர் மாற்றி அமைத்தார், கட்டிக்காத்தார். இந்தியப் பகுதி ஓலிபரப்பு ஆங்கிலமொழி, மலாய் மொழி, சீன மொழி ஒலிபரப்புகளுக்கு இணையாக விளங்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் பாலா.

ஒலிபரப்பை எப்போதும் செவிமடுப்பார். அதில் ஏதேனும் குறை கண்டால், உடனே திருத்திக்கொள்ளுமாறு பணிப்பார். குறை கண்டால் தட்டிக் கேட்பதும் நிறை கண்டால்  பாராட்டுவதும்  அவருடைய தனி இயல்பாகும். நிகழ்ச்சிகளைப் புதுமையாக செய்ய விரும்பி யாராவது அனுமதி கேட்டால், உடனே தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவார். இப்படியெல்லாம் இருந்ததால் பால காலத்து ஒலிபரப்பு சிறப்பாக இருந்தது. தமிழ் ஒலிபரப்பின் பொற்காலமாக அது போற்றப்படுகிறது.

1962இலிருந்து மலேசிய வானொலி இந்தியப் பகுதியின் தலைவராக இருந்துகொண்டே IPTAR எனப்படும் துன் அப்துல் ரசாக் ஒலிபரப்புப் பயிற்சிக் கழகத்தின் இயக்குநராகவும் ஒரே நேரத்தில் பாலா பணியாற்றினார்.  IPTAR ஒலிபரப்பாளர்களுக்காக தென்கிழக்காசியாவில் அமைந்த முதலாவது பயிற்சிக் கழகமாகும்.

இல்லற வாழ்க்கை

1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 27ஆம் நாளன்று பாலாவின் திருமணம் நடைபெற்றது. தொழிலாளர் அமைச்சில் உதவி ஆணையராக இருந்த திரு எம்.ஆர். நாயுடுவின் ஒரே மகள் கிரிஜா நாயுடுவின் கரம் பிடித்தார் பாலா. இத்திருமணத்துக்குக் காரணமாக இருந்தவரும் டத்தோ கே. பத்மநாதன்தான். அந்த ஆண்டில் நிகழ்ந்த மிகச் சிறந்த திருமண வைபவமாக அது அமைந்ததால் தொலைக்காட்சியிலும் அது ஒளிபரப்பப்பட்டது.

பாலா - கிரிஜா தம்பதியினருக்கு நான்கு பிள்ளைகள். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். முதலில் பிறந்தவர் அனுராதா (1966). அவரை அடுத்து லட்சுமி (1967). பின்னர் 1969இல் வெங்கடகிரி, 1973இல் ஸ்ரீதர்.

பாலாவின் சாதனைகளும் பங்களிப்பும்

1976இல் பாலா ஆசிய-பசிபிக் ஒலிபரப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (AIBD) தலைமைப் பொறுப்புக்கு யுனெஸ்கோவால் நியமிக்கப்பட்டார். அதை நிறுவியதுடன் அதன் நிர்வாக இயக்குனராகவும் அவர் பொறுப்பு வகித்தார். முன்பு IPTARஇல் உள்நாட்டு ஒலி-ஒளிபரப்பாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பு. இப்போது ஆசிய - பசிபிக் மண்டல ஒலி- ஒளிபரப்பாளர்களுக்குப் பயிற்சியளிக்கும் பொறுப்பு. இப்பொறுப்புகளைச் செம்மையாகவும் திறமையாகவும் செய்தார் அவர். உலக முழுவதுமுள்ள ஓலி-ஒளிபரப்புத்துறையில் தேர்ச்சி பெற்றவர்களைப் பயிற்றுநர்களாக அமர்த்தி ஆசிய - பசிபிக் வட்டார ஒலி-ஒளிபரப்பாளர்களுக்குப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தார்.  ஓலி-ஒளிபரப்பில் பழுத்த, பரந்த அனுபவமும்,  செய்வதைத் திருந்தச் செய்யும் மனோபாவமும், திடமான, நிலையான, தரமான கொள்கைகளும் இரண்டு பயிற்சிக் கழகங்களையும்  பிரகாசிக்க வைத்தன. முன்பு சிறிய இடத்திலிருந்து கொண்டு செயல்பட்ட ஒலிபரப்புப் பயிற்சி மையம் இப்போது பெரியதோர் இடமாக விரிவு கண்டிருப்பது ஒலிபரப்புத் துறையில் மலேசியா அடைந்துள்ள மேம்பாட்டுக்கு ஒரு வலுவான சான்றாகும்.

ஒலிபரப்புத் துறையில் பாலா ஆற்றிய மகத்தான சேவையையும் அளப்பறிய பங்கினையும் பாராட்டி, கனடாவின் டொராண்டோ ரையர்சன் கழகம் 1988இல் அவருக்கு  ஃபெல்லோஷிப் (fellowship)  விருதளித்துச் சிறப்பித்தது.

பத்தாண்டுகள் AIBDயில் பணியாற்றிய பிறகு பணி ஓய்வு பெற்றார் பாலா. என்றாலும், சமுதாய மேன்மைக்குப் பாடுபடும் பணியிலிருந்து அவர் ஒதுங்கவில்லை. சமுதாய நலன் கருதி  பல அமைப்புகளில் இணைந்து அவர் பாடுபட்டார்.

'தமிழ் ஓசை' நாளேட்டின் தலைவராக சிறிது காலம் பணியாற்றினார். 1991இல் அது நின்றுபோனது. அதன் பின்னர் 'மக்கள் ஓசை' வாரியத் தலைவராக இருந்து பணியாற்றினார். அந்த வகையில் அவரது சமுதாயத் தொண்டு தொடர்ந்தது.தொலிபரப்புத் துறையின் மேன்மைக்குப் பாடுபட்டதுபோல இந்தியர்களின் கல்வி, கலை, பண்பாட்டு வளர்ச்சியையும் அவர் ஊக்குவித்து வந்தார். அவரது அமைதியான பண்பும், இனிமையாகப் பழகும் தன்மையும், மனித நேயமும், விரிந்த மனப்போக்கும் எவரையும் எளிதில் வசப்படுத்திவிடும்.

மலேசிய இந்தியர்களால் நன்கு அறியப்பட்ட பிரமுகராக விளங்கிய பாலா, இந்தியர்களின் மேன்மைக்காக துன் வீ.தி. சம்பந்தன், டான்ஸ்ரீ மாணிக்கவாசகம், டத்தோ கே.பத்மநாபன், டத்தோ எஸ்.சுப்ரமணியம் போன்ற அரசியல் தலைவர்களுடனும் அணுக்கமாக ஒத்துழைத்தார். 1967இல், ஏழை இந்திய மாணவர்கள் உயர் கல்விபெற உதவும் நோக்கத்திற்காக இராம சுப்பையா உதவிச்சம்பள நிதி வாரியம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராக பொறுப்பேற்ற அவர், இறுதிவரை அந்தப் பொறுப்பை வகித்தார்.

மற்ற பணிகள்

சிறுதொழில் தொடங்கும் இந்தியர்களுக்கு உதவும் நோக்கத்தைக் கொண்ட மாஜூ ஜெயா கூட்டுறவுக் கழகத்தின் தலைவர்;

  ஒலிபரப்புத் துறையில் ஈடுபட்டிருந்தபோது உலக பத்திரிகைச் சுதந்திரக்குழுத் தலைவர்;

  பேங்க் பூரோ (மலேசியா) பெர்ஹாட் இயக்குனர்;

  ஸ்டீபன்ஸ் புராப்பட்டீஸ் சென். பெர்ஹாட் இயக்குனர்;

  அனைத்துலக ஒலிபரப்புக்கழக உறுப்பினர்;

  ஆசிய பொதுத்தொடர்பு, ஆராய்ச்சி மற்றும் தகவல் மைய உறுப்பினர்;

  காமன்வெல்த் ஊடகக் குழு உறுப்பினர்;

  இந்தியத் தூதரக உதவிச்சம்பளக் குழு உறுப்பினர் (1979);

  அனைத்துலக தொடர்புத்துறைக் கழக அறங்காவலர்;

  ஆசிய தொலைக்காட்சி திரைப்பட வங்கி கண்காணிப்புக் குழுத் தலைவர்;

பாலா எதிர்ப்புகளைக் கண்டோ, பின்னடைவுகளைக் கண்டோ அஞ்சியவரல்ல. நுரையீரல் பிரச்னையால் தொல்லையுற்றபோதிலும்கூட அதை நினைத்து அஞ்சியதோ துஞ்சியதோ இல்லை. வாழ்க்கை மீது பற்றும் நம்பிக்கையும் வைத்திருந்தார்; மனிதர்கள்மீது நம்பிக்கை வைத்திருந்தார். கடைசிவரை அதை அவர் மாற்றிக்கொள்ளவில்லை.

உணவும் உற்ற நண்பர்களும்

நண்பர்கள் சூழ இருப்பதை மிகவும் விரும்பியவர் பாலா. அவர்களுடன் உரையாடுவதிலும் அவர்களுக்கு வீட்டில் அல்லது உணவகங்களில் விருந்தளித்து மகிழ்வதிலும் இன்பம் காண்பார். நண்பர்களுடனான அவரது உரையாடல் பகல் அல்லது இரவு விருந்துக்கான அழைப்புடன்தான் முடிவுறும்.

உடுத்துவதிலும் தோற்றத்தை நேர்த்தியாக வைத்துக்கொள்வதிலும் தனி அக்கறை எடுத்துக்கொள்வார். நீல நிறப் பட்டுச் சட்டைகள் அணிய விரும்புவார். ஆங்கிலமும் தமிழும் அழகாகவும் தெளிவாகவும் அப்பழுக்கற்ற முறையிலும் பேசுவார். யார் கருத்துகளை எடுத்துரைத்தாலும் வரவேற்பார். தம் கருத்தைச் சொல்வதிலும் தயவுதாட்சணியம் பார்க்கமாட்டார். மனத்தில் பட்டதை நறுக்கென்றுரைப்பார். அவரது கருத்துகளில் குத்தலும் கிண்டலும் ஊடாடும். நேரம் தவறாமை அவரது தாரக மந்திரம். அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்களை மதிக்க மாட்டார்.

கடைசிக் காலத்தில் emphysema எனப்படும் நுரையீரல் நோயால் பீடிக்கப்பட்டு, மூச்சு விடுவதற்குக்கூட சிரமப்பட்டார். குணப்படுத்த இயலாத உடல்நலக் கேடாக அது விளங்கியது. ஆனாலும், மனம் தளரவில்லை பாலா. அந்நிலையிலும் சுவாசக் கருவியின் துணையுடன் பொதுநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்துவிடுவார். பின்னர், அந்நோயினால் படுத்த படுக்கையானார். 25.05.2009 அன்று நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருடன் உரையாடிய பின்னர், நள்ளிரவைத் தாண்டி மணி 12.25க்கு இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்தார். வாழ்க்கை முடிந்து இறப்பிலும் சிறப்புப் பெற்றார். அவரது நல்லுடல் தகனம் செய்யப்படுவதற்குக் கொண்டு செல்லப்பட்டபோது ஆயிரக்கணக்கானோர் உடன்சென்ற காட்சியே அதற்குச் சாட்சியாகும்.

பெரும்பாலோருக்கு பாலாவுடன் அதிகம் பழக வாய்ப்பில்லாமல் போனதில் மிகவும் வருத்தம். பாலாவுக்கும் ஒரு குறை இருந்தது. பேரப்பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் அவருக்கு. மற்றபடி தாம் வாழ்ந்தது ஒரு நிறைவான, முழுமையான வாழ்க்கை என்றே எப்போதும் கூறுவார்.  அவரது குடும்பத்தாரான நாங்கள், அவரின் சாதனைகளையும், எங்களிடம் அவர் பதித்துச் சென்ற குடும்பப் பண்புகளையும் விழுமங்களையும், எங்கள் அனைவரையும் இறுகப் பிணைக்கும் அவரது அன்பையும் என்றென்றும் போற்றுவோம்.

எங்களைவிட்டு அவர் மறைந்துவிட்டாலும் அவரை மறக்க முடியாமல் எங்கள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கிறார். இறந்திட்டும் இறவாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரின் ஆன்மா அமைதிபெற பிரார்த்தனை செய்வோமாக.

மூலம் (ஆங்கிலத்தில்) : திருமதி கிரிஜா பாலகிருஷ்ணன்

தமிழாக்கம் : பி. இராமச்சந்திரன்